தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளிலேயே வயது முதிர்ந்த நாணய மாற்று வணிகரின் கடையில் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற ஆடவர் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிபவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவது வழக்கம். அவர்களுக்கு சிறையில் அடைக்கப்படலாம். மேலும், நன்னடத்தையை வெளிப்படுத்தினாலும் அவர்களின் தண்டனைக் காலம் குறைக்கப்படாது.
மோசடிக் குற்றங்களுக்காக 60 வயது சையது முகம்மது சையது ஹசன் அல்காஃப் முதன்முறையாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சிறையில் ஏழு ஆண்டுகளைக் கழித்த பின்னர் அவர் 2016ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். இப்போது முதிய வயது நாணய மாற்று வணிகரிடமிருந்து இருந்த பணத்தைக் கொல்லையடிக்க அல்காஃப் முற்பட்டதால், அவர் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கான பொருத்தத்தை மதிப்பிடுவதற்கான அறிக்கை ஒன்றை மாவட்ட நீதிபதி ஹமிடா இப்ராஹிம் நேற்று கோரினார்.
வேலையில்லாத அல்காஃப், கடன் வழங்கிய பலருக்கு மொத்தம் $20,000 தொகையைப் பாக்கி வைத்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி இயூ தோங் சென் ஸ்திரீட்டில் உள்ள தி சென்ட்ரல் கடைத்தொகுதிக்கு அல்காஃப் சென்றார். அக்கடைத்தொகுதியின் ஒதுக்குபுறமான பகுதியில் திரு அமிர் ஹம்ஜா ஷேக் தாவூட்டின் நாணய மாற்று கடை இருந்ததை அல்காஃப் கவனித்தார்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அல்காஃப், அடுத்த நாள் 89 வயது திரு அமரின் கடையில் இருந்த பணத்தைக் கொல்லையடிக்க திட்டம் தீட்டினார். அக்டோபர் 20ஆம் தேதி இரவு 8 மணியளவில் கடையின் கதவைத் திரு அமிர் திறந்துகொண்டிருந்தபோது அல்காஃப் உள்ளே புகுந்தார்.
"இருவருக்கும் இடையே போராட்டம் நீடித்தது. அல்காஃப் ஏந்தியிருந்த பேனாக்கத்தியின் கைப்பிடியைக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் தலையிலும் முகப்பகுதியிலும் குறைந்தது இருமுறை தாக்கினார்," என்று அரசாங்க தரப்பு வழக்கறிஞர் சஞ்சிவ் வஸ்வாணி நீதிமன்றத்தில் கூறினார்.
அக்கம்பக்கத்தில் வழிப்போக்கர்கள் நடமாடியதைக் கவனித்த அல்காஃப், வெறுங்கையுடன் சம்பவ இடத்தைவிட்டுத் தப்பினார். தப்பிவிட வேண்டும் என்ற அவசரத்தில் தனது கறுப்புக் கண்ணாடியையும் பேனாக்கத்தியையும் அல்காஃப் விட்டுச் சென்றார். திரு அமிருக்கு நெற்றிப் பகுதியில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியின் உதவியுடனும் கறுப்புக் கண்ணாடி மற்றும் பேனாக்கத்தியிலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டும் போலிஸ் அதிகாரிகள் அல்காஃபை கண்டுபிடித்தனர். அக்டோபர் 22ஆம் தேதி பிடோக் சவுத் இல்லத்தில் அவர் கைதுசெய்யப்பட்டார். இம்மாதம் 26ஆம் தேதி அல்காஃபுக்கு தண்டனை விதிக்கப்படும்.

