சிங்கப்பூரின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட கட்டடங்களில் தனது பாதுகாவல் அதிகாரிகளை இன்னும் சிறப்பான முறையில் பணியில் அமர்த்துவதற்கு பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனமான 'செர்ட்டிஸ் சிஸ்கோ', மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது. அந்தக் கட்டடங்களின் உரிமையாளராக 'ஜேடிசி கார்ப்பரேஷன்' நிறுவனம் உள்ளது.
மையப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் செயல்பாடுகள் நிலையத்தின் மூலம் செர்ட்டிஸ் நிறுவனம் இந்தக் கட்டடங்களைத் தொலைவிலிருந்து கண்காணிக்கும். இதற்கு 'ஜேடிசி கார்ப்பரேஷன்' நிறுவனத்துடன் மூன்று ஆண்டுகால ஒப்பந்தத்தில் செர்ட்டிஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தகாலம் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. சிங்கப்பூரில் 16,000 ஊழியர்களைக் கொண்டுள்ள செர்ட்டிஸ், முக்கிய இடங்களில் மனிதவளம் உட்பட வளங்களைப் பணியில் அமர்த்த அறிவார்ந்த தரவுப் பகுப்பாய்வைப் பயன்படுத்தும்.
'ஆர்குஸ்' எனப்படும் கைபேசி செயலியை வைத்திருக்கும் பாதுகாவல் அதிகாரிகள், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

