சிறப்புத் தேவையுள்ள சிறார்களுக்கேற்ற வகையில் கற்றல் திட்டங்களை வழங்கும் புதிய பராமரிப்பு நிலையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. மைன்ட்ஸ் எனப்படும் அறிவுக்குறைபாடுள்ளோருக்கான சிங்கப்பூர் இயக்கம், சிறப்புத் தேவையுள்ளோருக்காக ஏற்படுத்தியுள்ள ஆறு நிலையங்களில் உட்லண்ட்ஸில் அமைந்துள்ள இந்த 'மைன்ட்ஸ் ரெயின்ட்ரீ' நிலையமும் ஒன்று.
ஏழு வயது முதல் 18 வயது வரையுள்ள சிறப்புத் தேவையுள்ள சிறார்களுக்கு பள்ளிக்கு முந்திய, பள்ளிக்குப் பிந்திய பராமரிப்பு சேவைகளை வழங்குவதுடன் மைன்ட்ஸ் ரெயின்ட்ரீ நிலையம், மாணவர்களின் தேவைக்கேற்ப கற்றல் திட்டங்களையும் வழங்குகிறது.
மாணவர்களின் பள்ளித் திட்டத்துக்குத் துணையாக கல்வி, செறிவூட்டல் திட்டங்களும் உருவாக்கப்படவுள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்குப் பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படும் திறன்களையும் அறிவாற்றலையும் வலுப்படுத்த முடியும் என்று மைன்ட்சின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி கோ கீ மே கூறினார்.
இந்த நிலையத்தில் சேர்ந்துள்ள 23 மாணவர்களில் ஒருவரான 15 வயது லீ சின் ஹூயின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் மற்றவர்களுடன் பழகவும் நிலையம் உதவியுள்ளது என்றார் அவரது பாட்டி திருவாட்டி இங் பெங் தியாவ்.
"முன்னர் காலையில் படுக்கையிலிருந்து எழ அவர் எப்போதும் அழுவார். உணவங்காடி போன்ற கூட்டமான இடங்களில் அசௌகரியமாக உணர்வார். ஆனால், இந்த நிலையத்துக்கு வரத்தொடங்கியது முதல் அவர் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் உள்ளார்," என்று திருவாட்டி இங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
லீ சின் ஹூயின் பிராதன பராமரிப்பாளரான திருவாட்டி இங்கிற்கு, சிறப்புத் தேவையுள்ள லீ சின் ஹூயைப் பார்த்துக்கொள்வதும் வீட்டு வேலைகளும் சேர்ந்து அவரைச் சோர்வடையச் செய்யும். தற்போது லீ சின் ஹூய் பகல் வேளைகளில் பராமரிப்பு நிலையத்துக்குச் செல்வதால் திருவாட்டி இங்கினால் அன்றாடம் நான்கு மணி நேரம் ஓய்வு கிடைக்கிறது.
காலையில் மைன்ட்ஸ் உட்லண்ட்ஸ் கார்டன் பள்ளிக்குச் செல்லும் லீ சின், பின்னர் மாலை 5.30 வரை பராமரிப்பு நிலையத்தில் இருப்பார்.
கடந்த மூன்றாண்டுகளாக லீ சின்னுக்கு பராமரிப்பு நிலையத்தை திருவாட்டி இங் தேடி வந்தார். ஆனால் 'குளோபல் டிவெலப்மெண்ட் டிலே' என்ற குறைபாடுள்ள லீ சின்னை சேர்த்துக்கொள்ள பல நிலையங்கள் மறுத்துவிட்டன.
அதேபோல் ஒற்றைப் பெற்றோரான 47 வயது திருவாட்டி ருஹ்மா ஹல்மிக்கு இந்த நிலையம் உதவியாக உள்ளது.
குடும்பத்தில் அவர் ஒருவரே வருமானம் ஈட்டும் நிலையில், சிறப்புத் தேவையுள்ள அவரது 12 வயது மகன் இக்பால் சயாபில்லைப் பராமரிப்பது அவருக்கு பெரும் சவாலாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் மகனை நிலையத்தில் சேர்த்த பின்னர். வேலையில் கவனம் செலுத்தவும் ஓய்வெடுக்கவும் தமக்கு நேரம் கிடைப்பதாக அவர் கூறினார்.
மைன்ட்சில் உள்ள ஏராளமான பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் பராமரிப்பாளர் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்தபோது சிறப்பு மாணவர் பராமரிப்பு நிலையத்தைத் தொடங்கும் எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்தது. சிறப்புத் தேவையுள்ள தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வழக்கமான பணி நேரத்தைக் கொண்ட வேலைகளை அவர்கள் விட வேண்டியிருந்தது என்றார் குமாரி கோ கீ மே.

