பேருந்துப் பயணி ஒருவருடன் அதன் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. பேருந்துக் கட்டணம் குறித்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக அவர்களுக்கு இடையே பதிவான உரையாடலிலிருந்து தெரியவந்தது.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6ஆம் தேதி) காலை 7.15 மணிக்கு, சேவை எண் 180 கொண்ட பேருந்து, புக்கிட் பாஞ்சாங் பேருந்து முனையத்தை நோக்கி பூன் லே வே வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் இருந்த ஸ்டாம்ப் இணையத்தள வாசகர் மஸ்லின், இந்தச் சம்பவத்தைக் கண்டு அதனைத் தமது கைபேசியின் மூலம் காணொளி எடுத்தார்.
" ஈஸி-லிங் அட்டையில் போதிய தொகை இல்லாத பயணியிடம் பேருந்துக் கட்டணத்தை ரொக்கமாகக் கட்டுமாறு ஓட்டுநர் கறாராகக் கூறியிருந்தார். அதனால் பயணிக்குக் கோபம் ஏற்பட்டது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்," என்று திரு மஸ்லின் தெரிவித்தார்.
இறுதியில், கட்டணத்தை சில்லறையாகச் செலுத்திய அந்தப் பயணி பின்னர் பேருந்து இருக்கையில் அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்ததாக 'ஸ்டாம்ப்' தெரிவித்தது.

