நீதிமன்றம்: வெளிநாட்டு அரசு ஊழியர்களுடன் லஞ்சம், ஊழலில் ஈடுபடுவோர் சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும்

நீதிமன்றம்: வெளிநாட்டு அரசு ஊழியர்களுடன் லஞ்சம், ஊழலில் ஈடுபடுவோர் சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும்

2 mins read
b40ebb8f-d2d0-48b0-b96d-24ad2834209f
அமெரிக்க கடற்படை தொடர்பான லஞ்ச, ஊழல் சதி விவகாரத்தில் கூட்டுச் சதியில் ஈடுபட்ட சிங்கப்பூர்  பெண்மணியான ஷரோன் ரேச்சல் குர்ஷரன் கோர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்ட் டைம்ஸ் -

வெளிநாட்டு அரசு ஊழியர்களுடன் லஞ்ச ஊழலில் ஈடுபடுவது தண்டனையை அதிகரிக்கக்கூடிய அம்சமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்த குற்றம் புரிவோர் சிறை செல்வதை எதிர்பார்க்கலாம் என்று உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படை தொடர்பான லஞ்ச, ஊழல் சதி விவகாரத்தில் கூட்டுச் சதியில் ஈடுபட்ட சிங்கப்பூர் பெண்மணியான ஷரோன் ரேச்சல் குர்ஷரன் கோரின் சிறைத் தண்டனையை 33 மாதங்களிலிருந்து 40 மாதங்களாக உயர்த்தியபோது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒப்பந்தப் புள்ளிகள் தயாரிப்பதில் நிபுணரான இவர், அமெரிக்க கடற்படை தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிடுவதற்காக மலேசிய தற்காப்புத் துறை ஒப்பந்ததாரரான லெனர்ட் கிளென் ஃபிரான்சிஸ் என்பவரிடமிருந்து $130,000 பெறுமானமுள்ள ரொக்கமும், விலையுயர்ந்த சொகுசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டார்.

இந்த ரகசியத் தகவல்களைக் கொண்டு ஃபிரான்சிஸ் அமெரிக்க கடற்படை ஊழியர்களுக்கு மில்லியன் கணக்கில் பணம், பொருட்கள், பாலியல் சேவை வழங்குவோர், உல்லாச ஹோட்டல்களில் தங்கும் வசதி போன்றவற்றை அளித்து ரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம், கிளென் டிஃவென்ஸ் மரின் ஏஷியா என்ற தனது சிங்கப்பூர் நிறுவனம் பெரும் தொகையிலான ஒப்பந்தங்களை லெனர்ட் கிளென் ஃபிரான்சிஸ் பெற முடிந்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் அமெரிக்க கடற்படை கிட்டத்தட்ட 35 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏமாற்றப்பட்டதாக நீதிமன்றம் அறிந்தது.

இதில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ஒரு ரியர் அட்மிரல் உள்பட பல மூத்த அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் திருவாட்டி கோர், 16 அெமரிக்க கடற்படை ஒப்பந்தங்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை கசிய விட்டுள்ளார்.

இதனால், திரு ஃபிரான்சிஸின் நிறுவனம் அமெரிக்க கடற்படை வழங்கவிருந்த 14 ஒப்பந்தங்களில் 11 ஒப்பந்தங்களை ஏலக் குத்தகையில் பெற்றார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சென்ற ஆண்டு திருவாட்டி கோருக்கு 33 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. திருவாட்டி கோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்றும் அது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் செய்த மேல்முைறயீட்டில் தற்பொழுது உயர் நீதிமன்றம் கோரின் தண்டனையை 40 மாதங்களாக உயர்த்தியுள்ளது.