தொடக்க நிலை 6ஆம் வகுப்பில் படிக்கும் தனது மகனின் கை, கால்களில் பிரம்படி அடையாளங்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த தாயார், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்ற செவ்வாய்க் கிழமை அன்று காவல் துறைக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர். வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக இந்தச் சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த தாயார் கிளாரி காங், பெற்றோரிடம் தெரிவிக்காமல் தனது மகனுக்கும் மற்றொரு மாணவருக்கும் கட்டொழுங்கு ஆசிரியர் பிரம்படி தண்டனை வழங்கியுள்ளார் என்றார்.
இது குறித்து கல்வி அமைச்சிடமும் தகவல் தெரிவித்துள்ள அவர் கூறினார்.
மகனுக்கும்் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையறிந்து இருவரையும் அழைத்து கட்டொழுங்கு ஆசிரியர் தண்டித்துள்ளார் என்று அவர் சொன்னார்.
பிரம்படிக்குப் பிறகு தனது மகன் அழுததாகவும் வீட்டுக்கு வந்ததும் மகனின் கை, கால்களில் பிரம்படி அடையாளங்கள் இருந்ததைக் கண்டுபிடித்த தனது கணவர் மகனிடம் நடந்தவற்றை கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார்.
பிரம்படியால் தனது மகன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்குச் செல்ல மறுப்பதாக தாயார் காங் தெரிவித்தார்.
இதற்கிடையே பள்ளியில் நடந்த பிரம்படி சம்பவம் குறித்து தகவல் வந்துள்ளதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கட்டொழுங்கை நிலை நிறுத்து வதற்கான வழிகாட்டிகளை பள்ளி களுக்கு அமைச்சு வழங்க விருப்பதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

