15 வயது பெண்ணுக்கு சமூக உயிர் காப்பாளர் விருது

15 வயது பெண்ணுக்கு சமூக உயிர் காப்பாளர் விருது

2 mins read
8f31a072-6100-4216-9a34-210a207c8856
தெமாசெக் உயர்நிலைப் பள்ளி மாணவியான டினிய் குர்ரதுவாய்னிக்கு நேற்று விருது வழங்கி கௌரவித்த குடிமைத் தற்காப்புப் படையின் கமாண்டர் கர்னல் ஆலன் டோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்து உயிரைக் காப்பாற்றிய 15 வயது டினிய் குர்ரதுவாய்னிக்கு நேற்று சமூக உயிர் காப்பாளர் விருது வழங்கப் பட்டது.

தெம்பனிசில் உள்ள குடிமைத் தற்காப்புப் படையின் 2வது படைப் பிரிவு தலைமையகத்தில் நேற்று அவருக்கு விருது வழங்கப்பட்டது. சென்ற ஜூலை 19ஆம் தேதி பேருந்தில் டினிய் குர்ரதுவாய்னி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது நியூ அப்பர் சாங்கி ரோடு அருகே அவர் பயணம் செய்த பேருந்து ஒரு பெண் மீது மோதியது. இதனால் அந்தப் பெண் மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்த டினிய் குர்ரதுவாய்னி சற்றும் தாமதிக்காமல் விரைந்து சென்று அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சைகளை செய்தார்.

மயங்கிவிழுந்த பெண்ணுக்கு நாடித் துடிப்பு இல்லாததால் இதய இயக்க மீட்பு சிகிச்சையை அவர் தொடர்ந்து செய்தார்.

இதனால் அந்தப் பெண் மயக்கம் தெளிந்து எழுந்தார். அப்போதும் வீட்டுக்குப் போகாமல் மருத்துவ உதவியாளர்கள் வரும் வரை அவர் காத்திருந்தார்.

இவரது இந்தத் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி நேற்று குடிமைத் தற்காப்புப் படை சமூக உயிர் காப்பாளர் விருதை வழங்கியது.

இந்த நிலையில் 2வது படைப் பிரிவின் கமாண்டரான கர்னல் ஆலன் டோ, "டினிய்யை போல தன்னலமின்றி பொதுமக்கள் செயல்படுவதை ஊக்கமூட்ட விரும்புகிறோம்," என்றார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்ஸ் வாகனம் வரும் வரை பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவிகளை வழங்குவது மிகவும் முக்கியம்.

இந்த முக்கியமான தருணத்தில் ஒவ்வொரு நிமிடமும் உயிரைக் காப்பாற்ற உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.