வழுக்கி விழுந்தார்: நிறுவனமும் பொறுப்பு

வழுக்கி விழுந்தார்: நிறுவனமும் பொறுப்பு

2 mins read

தெம்பனிஸ் மார்ட்டில் ஈரச்சந்தை ஒன்றை நடத்துகின்ற 'ஹீட்டோன் ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனமும் அதனுடைய துணை நிறுவனமான 'ஹீட்டோன் எஸ்டேட்' என்ற நிறுவனமும் ஒரு மாதுக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவாட்டி ஏஞ்சலா லிம் என்ற மாது அந்த ஈரச்சந்தையில் இருக்கும் ஒரு வழியில் 2011 ஆகஸ்ட் 5ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணிக்கு நடந்து சென்றபோது வழுக்கி விழுந்துவிட்டார். அவருக்குத் தண்டுவட எலும்புவால் பகுதியில் முறிவு ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது அந்த மாதுக்கு வயது 32.

இந்த வழக்கு அசாதாரணமான ஒன்று. தரை ஈரமாக இருந்ததைப் பற்றி பிரச்சினை இல்லை. காரணம் ஈரச்சந்தையில் தரை ஈரமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் யாரோ சமையல் செய்து அதன்மூலம் தரையில் எண்ணெய் சிந்தி இருந்ததே அந்த மாது வழுக்கி விழுந்ததற்கான காரணம்.

தரையில் எண்ணெய் பசை இருந்ததால் அந்த மாது வழுக்கி விழுந்துவிட்டதாகவும் இதற்கு அந்த ஈரச்சந்தையை நடத்தும் நிறுவனமும் அதன் உரிமையாளரான நிறுவனமும் 65 விழுக்காடு காரணம் என்றும் விழுந்ததற்கு 35 விழுக்காட்டுப் பொறுப்பை மாது ஏற்கவேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

எவ்வளவு இழப்பீடு என்பது பின்னர் முடிவுசெய்யப்படும். இரண்டு தரப்புகளுமே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கின்றன.

ஈரச்சந்தையில் நடக்கும்போது தரை வழுக்கக்கூடும் என்பதால் எல்லாரும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அத்தகைய சந்தைகளில் யாராவது விழுந்திருக்கக்கூடிய சம்பவங்கள் அரிதுதான் என்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சுட்டினார்.

தன்னுடைய காதலனுடன் நடந்து சென்றுகொண்டு இருந்த திருவாட்டி லிம், தரை வழுக்கியதால் பின்புறமாக விழுந்துவிட்டார். தரையில் எண்ணெய் சிந்தி இருந்ததை அந்த மாது தரையில் விழுந்தபின் தெரிந்துகொண்டார்.