மின்னணுச் சாதனங்கள் மூலம் மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள், பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். போலியான மருத்துவ சான்றிதழ்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நியதிகள் இருக்கின்றன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வேறு இடத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தொலைத்தொடர்பு மூலம் சேவை வழங்கும் நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சு, வரவிருக்கும் சுகாதார பராமரிப்புச் சேவை சட்டத்தில் பல ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிடுகிறது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் இத்தகைய தொலைதூர சேவையை வழங்கும் மருத்துவர்களைத் தனது ஒழுங்குமுறை சோதனை நடைமுறைச் செயல்திட்டத்தில் சேர்ந்துகொள்ளும்படி அமைச்சு ஆலோசனை கூறி உள்ளது. தொலைதூரச் சேவை நோயாளிகளுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் உதவி செய்யக்கூடிய புத்தாக்க முறையாக இருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்து உள்ளது. இருந்தாலும் இத்தகைய சேவைகளில் சமூக சுகாதார உதவித்திட்ட மானியத்தை உள்ளடக்கும் எண்ணம் அமைச்சிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

