'புதிய வேட்பாளர்கள் முன்னதாகவே களத்தில் இறங்கி அனுபவம் பெறவேண்டும்'

'புதிய வேட்பாளர்கள் முன்னதாகவே களத்தில் இறங்கி அனுபவம் பெறவேண்டும்'

2 mins read

பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய புது வேட்பாளர்கள் முன்னதாகவே களத்தில் இறக்கிவிடப்பட வேண்டும். அப்படி செய்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்றால் என்ன என்பதை சிறந்த முறையில் அவர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடக்கூடிய புதிய முகங்களை வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதும் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளை அந்த வேட்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியதும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

காலாங் ஆறு மேம்பாட்டுப் பணித் திட்ட அதிகாரபூர்வ தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.

சமூக நிலையில் சில பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு, குறிப்பாக அடித்தள அமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிராதவர்களுக்கு காலம் பிடிக்கும் என்பதை தற்காப்பு அமைச்சர் சுட்டினார்.

மக்கள் செயல் கட்சியின் புதிய வேட்பாளர்கள் எப்போது அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அமைச்சர், அது பிரதமரைப் பொறுத்தது என்றார்.

டாக்டர் இங்கின் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி எல்லை திருத்தி அமைக்கப்படுமா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், அது தொகுதி எல்லை மறுபரிசீலனைக் குழுவின் முடிவைப் பொறுத்தது என்றார்.

இருந்தாலும் சிறிய தொகுதிகளையேத் தான் விரும்புவதாக பிரதமர் ஏற்கெனவே அறிவித்து இருப்பதைச் சுட்டிய டாக்டர் இங், ஒவ்வொரு தொகுதியையும் தனி தொகுதிகளாக நாம் கருதவேண்டும் என்று மசெக கிளை உறுப் பினர்களுக்குத் தான் ஆலோசனை கூறி இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், பீஷான்-தோ பாயோவில் இடம்பெற்றுள்ள ஐந்து வட்டாரங்களில் எந்தவொரு வட்டாரத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தொகுதி எல்லை மறுபரிசீலனைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியான பிறகு, அடுத்த தேர்தல் பற்றி கருத்து தெரிவித்த முதலாவது அமைச்சர் டாக்டர் இங். இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து தேர்தல் நடைமுறைகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கி இருக்கின்றன.