சிங்கப்பூரில் மின்சாரத்தை விநியோகம் செய்யும் எஸ்பி குழுமம், தீவு முழுவதிலும் மொத்தம் 200க்கும் மேற்பட்ட வாகன மின்னேற்ற இடங்களை அமைத்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்ததைக் காட்டிலும் அதிகம்.
அந்த மின்னேற்ற இடங்களில் 52ல், 'டிசி' எனப்படும் நேரடி மின்சார அதிவேக மின்னேற்றிகளும் அடங்குவதாக எஸ்பி தெரிவித்தது. அடுத்த ஆண்டுக்குள் 1,000 மின்னேற்றிகளை அமைக்க எஸ்பி திட்டமிடுகிறது. அவற்றில் 250 'டிசி' அதிவேக மின்னேற்றிகளாக இருக்கப்போகின்றன.
மின்சாரக் கார்களை ஓட்டுபவர்களுக்கு 'டிசி' மின்னேற்றிகள் அதிக வசதியானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு காருக்கு முழுமையாக மின்னேற்றம் செய்வதற்கு 'ஏசி' மின்னேற்றிக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஆகலாம். இதனை 'டிசி' ஏறக்குறைய அரை மணி நேரத்திலேயே செய்து முடித்துவிடுகிறது. இருந்தபோதும், டிசி மின்னேற்றிகளை அமைப்பது அதிக செலவாவதுடன் மின்சார ஆற்றல் மிக அதிகமாகவும் தேவைப்படுகிறது.
வாகனங்கள் அதிகம் காத்திருக்க இயலாத இடங்களில் டிசி மின்னேற்றிகள் வழக்கமாகப் பொருத்தப்படுகின்றன. அவ்வாறே, சிங்கப்பூரிலுள்ள டிசி மின்னேற்றிகள் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ளன. சிங்கப்பூரின் முதல் டிசி மின்னேற்றி அங்குள்ள 'ரிபப்ளிக் பிளாசா' கடைத்தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
"சிங்கப்பூரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகன முறையை உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என்று எஸ்பி குழுமத்தின் உத்திபூர்வ மேம்பாட்டுத் தலைவர் திரு கோ சீ கியோங் தெரிவித்தார்.

