ஜூரோங் வட்டார ரயில்பாதையில் 5 நிலையங்கள் கட்ட $740மி. ஒப்பந்தங்கள்

ஜூரோங் வட்டார ரயில்பாதையில் ஐந்து பெருவிரைவு ரயில் நிலையங்களைக் கட்டுவதற்கு $739.5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஒப்பந்தங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியிருக்கிறது. 

சுவா சூ காங், சுவா சூ காங் வெஸ்ட், தெங்கா, ஹொங் கா, கார்ப்பரேஷன் ஆகியன அந்த ஐந்து நிலையங்கள் என ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்தது. 

நிலையங்களின் கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு தொடங்கி 2026-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிங்கப்பூரின் ஏழாவது ரயில்பாதையான ஜூரோங் வட்டார ரயில்பாதை, 2026 முதல் மூன்று கட்டங்களாகத் திறக்கப்படவுள்ளது. இதில் மொத்தம் 24 நிலையங்கள் இருக்கும். ஜூரோங் வட்டாரத்தை இரண்டாவது மத்திய வர்த்தக வட்டாரமாக உருமாற்றும் திட்டத்தை முன்னிட்டு அங்கு போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்படுகிறது. 

சுவா சூ காங், சுவா சூ காங் வெஸ்ட், தெங்கா நிலையங்களையும், அவற்றை இணைக்கும் 4.3 கிலோமீட்டர் நீள மேம்பாலத் தடத்தையும் வடிவமைத்து கட்டுவதற்கான $465.2 மில்லியன் ஒப்பந்தம் ஷங்காய் டன்னல் என்ஜீனியரிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது. 

இந்த ஒப்பந்தத்தின்படி, தற்போதுள்ள சுவா சூ காங் ரயில் நிலையம் ஜூரோங் வட்டார ரயில்பாதையுடன் ஒருங்கிணைக்கப்படும். 

ஹொங் கா, கார்ப்பரேஷன் நிலையங்களையும், அவற்றுக்கு இடையில் 3.4 கிலோமீட்டர் நீள மேம்பாலத் தடத்தையும் கட்டுவதற்கான $274.3 மில்லியன் ஒப்பந்தம் எங் லீ என்ஜீனியரிங், வாய் ஃபொங் கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆகிய இரு உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. 

ஜூரோங் வட்டார ரயில்பாதை நீண்டகாலத்தில் தினமும் 500,000 பயணிகளுக்குச் சேவை வழங்கும் என கணிக்கப்படுகிறது.