சட்டவிரோத கார் பந்தயம்; இருவருக்கு சிறை, அபராதம்

சட்டவிரோத கார் பந்தயம்; இருவருக்கு சிறை, அபராதம்

2 mins read
975c4dda-826a-4db0-b3aa-abc77cdcf432
(இடமிருந்து) சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்ட கோ ஸெ மிங், கைருல்அன்வார் இஸ்மாயில். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சட்டவிரோதமாக ஏற்பாடு செய்யப்பட்ட கார் பந்தயத்தில் அசுர வேகத்தில் தங்கள் வாகனங்களை ஓட்டிச்சென்று பிடிபட்ட இருவருக்கு நேற்று ஐந்து வார சிறைத் தண்டனையும் ஆளுக்கு $1,500 அபராதமும் விதிக்கப்பட்டன.

அத்துடன் சிறைத் தண்டனையை நிறைவேற்றிய பின்னர் இருவரும் அனைத்து வகை வாகனங்களை ஓட்டுவதற்கு மூன்று ஆண்டுத் தடையும் பிறப்பிக்கப்பட்டது.

நள்ளிரவு நேரத்தைத் தாண்டி லிம் சூ காங் வட்டாரத்தில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதியன்று 37 வயதான கோ ஸெ மிங், 26 வயதான கைருல்அன்வார் இஸ்மாயில் ஆகிய இருவரும் சட்டவிரோத கார் பந்தயத்தில் பங்கேற்றனர். மணிக்கு 70 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதைவிட இருமடங்கு வேகத்தில் இருவரும் தங்களின் 'வொல்க்ஸ்வேகன் ஜிடிஐ' வாகனங்களில் சென்றனர்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி சட்டவிரோதமாக கார் பந்தயத்தில் ஈடுபடுவது குற்றம். ஆனால் அக்குற்றச்சாட்டை இருவரும் மறுத்து முன்னரே வழக்கு விசாரணை கோரியிருந்தனர். விசாரணையின்போது, அவசரமாக கழிவறைக்குப் போக வேண்டியிருந்ததால் வாகனத்தை வேகமாகச் செலுத்தியதாக கோ கூறினார்.

தன் கார் என்ஜினின் சோதனை விளக்கு இயங்குவதைச் சரிபார்க்க வாகனத்தை வேகமாகச் செலுத்தியதாக கைருல்அன்வார் சொன்னார்.

நம்பமுடியாத வகையில் இருவரின் வாதங்களும் உள்ளதென அரசு தரப்பு வழக்கறிஞரான செந்தில்குமார் சபாபதி கூறினார். பந்தயம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட நேரத்தில் இரு வாகனங்களும் அருகருகே அதிவிரைவாகச் சென்றதை அவர் சுட்டினார்.

லிம் சூ காங் வட்டாரத்தில் சட்டவிரோதப் பந்தயம் நடைபெற இருப்பது குறித்து போலிசாருக்குத் துப்பு கிடைத்திருந்தது. அதையடுத்து அதிகாரி பர்டீப் தாஸ் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்தில் காத்திருந்தனர். அப்போது லிம் சூ காங் சாலையில் கிட்டத்தட்ட 40 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் பலர் அங்குக் கூடியும் இருந்தனர்.

பின்னிரவு 1.07 மணியளவில் கோவும் கைருல்அன்வாரும் வேகக்கட்டுப்பாட்டை மீறித் தங்கள் வாகனங்களை ஓட்டியபோது அவர்களை அதிகாரிகள் துரத்திப் பிடித்தனர்.