சுடச் சுடச் செய்திகள்

பிடிஓ, மறுவிற்பனை வீடு வாங்குவோருக்கு கூடுதல் மானியம்

இன்றிலிருந்து முதன்முறையாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு வாங்குவோர் கூடுதல் மானியத்தைப் பெறுவர். வீட்டு வகை, வீடு அமைந்திருக்கும் இடம் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு கூடுதல் நீக்குப்போக்கு வழங்கப்படுகிறது. 

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, வீடு வாங்கத் தகுதிபெறும் வருமான உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இந்த மாற்றங்களை நேற்று அறிவித்தார். மானியக் கட்டமைப்பை இந்த மாற்றங்கள் எளிமைப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், முதன்முறையாக வீடு வாங்குவோருக்கு வீட்டு விலை கட்டுப்படியாக இருப்பதை இவை உறுதிசெய்வதாகச் சொன்னார்.

கடந்த மாதம் தேசிய தினக் கூட்ட உரையில் பேசிய பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூரர்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும் வீவக வீட்டு விலையைக் கட்டுப்படியாகக்
கூடிய நிலையில் வைத்திருக்கவும் தமக்கும் தமது இளைய அமைச்சர்களுக்கும் மேலும் சில யோசனைகள் இருப்பதாகக் கூறியிருந்தார். அவரது உரைக்குப் பின்னர் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது, மூன்று வகையான மானியங்கள் உள்ளன. $50,000 மதிப்பிலான மத்திய சேம நிதி (மசே நிதி) வீடமைப்பு மானியம், $40,000 வரையிலான கூடுதல் மசே நிதி வீடமைப்பு மானியம், $40,000 வரை சிறப்பு மசே நிதி வீடமைப்பு மானியம் ஆகியன அவை.

தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகளை வாங்குவோர், ஏற்கெனவே கூடுதல் மற்றும் சிறப்பு வீடமைப்பு மானியத்துக்குத் தகுதி பெறலாம். மறுவிற்பனை வீடுகளை வாங்குவோர் மசே நிதி வீடமைப்பு மானியத்துக்கும் கூடுதல் வீடமைப்பு மானியத்துக்கும் தகுதி பெறலாம். ஆனால் இன்றிலிருந்து, கூடுதல் வீடமைப்பு மானியமும் சிறப்பு வீடமைப்பு மானியமும் மேம்படுத்தப்பட்ட புதிய மசே நிதி வீடமைப்பு மானியமாக இணைக்கப்படுகின்றன.

புதிய வீடு வாங்கினாலோ மறுவிற்பனை வீடு வாங்கினாலோ $80,000 வரையிலான மானியத்தைப் பெறலாம். வீட்டு வகை, இடம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு கட்டுப்பாடு எதுவும் இருக்காது. முன்னதாக, முதிர்ச்சியடையாத பேட்டைகளில் நான்கறை அல்லது அதைவிட சிறிய வீடுகளை வாங்குவோருக்கு மட்டும் சிறப்பு வீடமைப்பு மானியம் வழங்கப்பட்டது.

வீடு வாங்குவோர் 95 வயதாகும் வரை வீட்டின் குத்தகைக்காலம் நீடிக்க வேண்டும் என்பது இந்த மேம்படுத்தப்பட்ட மானியத்தின் நிபந்தனை. இந்த நிபந்தனைக்குத் தகுதி பெறாதவர்கள், வீட்டின் குத்தகைக்காலத்தைப் பொறுத்து அதற்கேற்ற மானியத்தைப் பெறுவர்.

இந்த மாற்றத்தின் மூலம், மாத வருமானமாக $4,800 பெறும் குடும்பம் ஒன்று, முதிர்ச்சியடைந்த பேட்டையில் புதிய நான்கறை வீடு வாங்கினால், $45,000 மதிப்பிலான மானியம் வழங்கப்படலாம். பழைய முறையின்படி, அக்குடும்பத்துக்கு $5,000 மட்டுமே வழங்கப்பட்டது.

மறுவிற்பனை வீடு வாங்குவோரைப் பொறுத்தவரை, அவர்களுக்கு $160,000 பெறுமானமுள்ள மானியம் வழங்கப்படலாம். முன்பைவிட இது மூன்றில் ஒரு பங்கு அதிகம். இந்த மாற்றங்கள், வீடு வாங்குவோருக்கு கூடுதல் நீக்குப்போக்கை வழங்குவதாக அமைச்சர் வோங் சொன்னார். கடந்த ஆண்டு முதன்முறையாக வீடு வாங்கிய நான்கில் மூன்று குடும்பங்கள், புதிய வீடு வாங்கியதை அவர் சுட்டினார்.

வீடு வாங்க மற்றொரு மாற்றத்தையும் திரு வோங் அறிவித்தார். புதிய வீடு மற்றும் ‘எக்சிகியூட்டிவ் கொன்டோமினியம்’ (இசி) வீடு வாங்க சிங்கப்பூர் குடும்பங்களுக்கான மாத வருமான உச்சவரம்பு $2,000 உயர்த்தப்படுகிறது. புதிய வீட்டுக்கு வருமான வரம்பு $14,000ஆகவும் ‘இசி’ வீட்டுக்கு அது $16,000ஆகவும் இருக்கும்.

கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டதையடுத்து, சிங்கப்பூரர்களின் வருமானம் உயர்ந்திருப்பதைத் திரு வோங் சுட்டினார். எனவே, வீடு வாங்க கூடுதலான சிங்கப்பூரர்கள் தகுதி பெற வருமான வரம்பு இப்போது உயர்த்தப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த மாற்றங்களின் மூலம், பொது வீடமைப்புக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் அடுத்த ஆண்டு கூடுதலான பிடிஓ வீடுகளை வீவக விற்பனைக்கு வெளியிடக்கூடும் என்றார் அவர். இவ்வாண்டு 15,000 வீடுகளை வெளியிட வீவக முயற்சிகளை எடுத்து வருவதாக திரு வோங் குறிப்பிட்டார்.
வீடு வாங்குவோர் இந்த மாற்றங்கள் மூலம் பலனடைய வேண்டும் என்பதற்காக, கடந்த மாதம் வெளியிடப்படவிருந்த பிடிஓ திட்டம் இம்மாத பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon