காலை உணவிற்குள் கரப்பான்

உணவங்காடி நிலையத்தில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த  'ஸ்டாம்ப்' செய்தி இணையத்தள வாசகர் ஒருவர் அதற்குள் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிடோக் ரெசர்வோர் ரோட்டிலுள்ள  உணவங்காடி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி வாக்கில் அவர் தமது காலை உணவைப் பொட்டலமாக வாங்கி எடுத்துச் சென்றார்.

தனது பெயரை வெளியிட விரும்பாத அந்நபர், பதார்த்தத்திலிருந்து சில வாய் அளவு சாப்பிட்ட பின்னர் அதற்குள் அந்தக் கரப்பான் இருந்ததைத் கண்டார். உடனே அந்தச் சாப்பாட்டைத் தூக்கி எறிந்ததாக அவர் கூறினார்.

உணவைச் சமைத்தவர் வயதானவர் என்பதாலும் அவருக்கு வேலை போய்விடக்கூடாது என்பதற்காகவும் உணவுக் கடையின் பெயரை வெளியிடப்போவதில்லை என்றார் அந்நபர். இருந்தபோதும் தாம் அடைந்த அருவருப்பிலிருந்து விடுபட சில காலமாகும் என்று அவர் தெரிவித்தார்.