இரு வெவ்வேறு சம்பவங்களில் இரு பாதசாரிகள் காயம் அடைந்த சம்பவங்கள் தொடர்பில் ஒரு மின்-ஸ்கூட்டர் ஓட்டிக்கு அபராதமும் மற்றொருவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பிரைம் கார் ஓட்டுநரான 61 வயது டான் கிம் மோவுக்கு நேற்று 18 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஈசூன் ரிங் ரோட்டில் புளோக் 760க்கு முன்பு உள்ள நடைபாதையில் மின்-ஸ்கூட்டரை அவர் கவனக்குறைவாக ஓட்டியதால் பகுதி நேர விற்பனை நிர்வாகியான டான் பெக் லே, 58 காயம் அடைந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது டான் ஒரு கையில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மின்-ஸ்கூட்டரை மணிக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி வந்தார்.
சைக்கிள் பாதையில் இரு பாதசாரிகள் வருவதைக் கண்ட டான், மின்-ஸ்கூட்டரின் வேகத்தை குறைக்காமலே அவர்களுடைய பாதையில் நுழைந்து செல்ல முயற்சி செய்தார். ஆனால் மின்-ஸ்கூட்டரின் கட்டுப்பாட்டை அவர் இழந்ததால் திருமதி டான் மீது மோதினார். இதனால் திருமதி டான் முன்பக்கமாக விழுந்தார்.
காலில் காயம் அடைந்த திருமதி டானுக்கு டானும் இதர இரண்டு பாதசாரிகளும் உதவி செய்தனர். அப்போது தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்களை திருமதி டானுக்கு வழங்க அவர் முதலில் மறுத்துவிட்டார். பின்னர் திருமதி டான் வற்புறுத்திக் கேட்டபின் தந்தார்.
இந்த நிலையில் இரவு பத்து மணிக்கு கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு திருமதி டான் சென்றதால் அவரது வலது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு 48 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. மேலும் 1,680 வெள்ளி வருவாயை அவர் இழந்தார். ஆனால் திருமதி டானுக்கு ஏற்பட்ட இழப்பை அவர் ஈடுகட்டியிருந்தார்.
மற்றொரு வழக்கில் தாம் சீ பூனுக்கு, 36, 3,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
கவனக்குறைவாக மின்-ஸ்கூட்டரை ஓட்டி இயோ எங் கூங்குக்கு காயம் விளைவித்த குற்றச்சாட்டை அவர் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

