நோய்வாய்ப்பட்ட 39 பேர்; உணவு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 39 பேருக்கு இரைப்பை குடல்அழற்சி (gastroenteritis) தொற்றியதை அடுத்து சிங்கப்பூர் உணவு அமைப்பு, இரண்டு உணவு தயாரிப்பு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்திருக்கிறது.

ஆகஸ்ட் 31ஆம் தேதியிலும் செப்டம்பர் 2ஆம் தேதியிலும் ‘மம்ஸ் கிட்ச்சன்’, ‘செரிஷ் டிலைட்ஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்களிலிருந்து உணவு சாப்பிட்ட அந்த 39 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து ஆராய்வதாகச் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் கூட்டறிக்கை மூலமாகத் தெரிவித்தன.

பாதிக்கப்பட்டோரில் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் தற்போது இருக்கும் ஒருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு அறிவிப்பு வரும்வரை அவ்விரண்டு நிறுவனங்களின் உரிமங்களை சிங்கப்பூர் உணவு ஆணையம் ரத்து செய்துள்ளது.