லாரியை மரத்தில் மோதி இருவரைக் கொன்ற ஓட்டுநர் ‘போதைப்பொருள் உட்கொண்டார்’

புக்கிட் தீமா ரோட்டிலுள்ள ஒரு மரத்தில் தனது லாரியை மோதி லாரியிலிருந்த இரண்டு பயணிகளின் மரணத்தை விளைவித்த ஆடவர், போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை ஓட்டியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

லாரியின் ஓட்டுநரான 25 வயது ஜோசஃப் லோ மோ பூன், முன்யோசனையின்றித் தனது லாரியை ஓட்டி இரண்டு ஆடவர்களின் மரணத்தை விளைவித்த குற்றத்தைப் புதன்கிழமை (செப்டம்பர் 11) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.  25 வயது திரு ஏரன் பிரேம் மைக்கல், 43 வயது திரு சியோ ஹோங் ஹெங் ஆகிய அந்த இருவரும் லோவின் நண்பர்கள். சம்பவம் நடந்த இரவன்று லோவின் பிறந்தநாளை அவருடன் அந்த இருவரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

விநியோக ஓட்டுநராகப் பணிபுரிந்த லோ, அக்டோபர் 19ஆம் தேதியன்று அந்நாளுக்கான கடைசி விநியோகத்தை முடித்த பிறகு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. லோ,  வழியில் திரு சியோவைத் தனது லாரியில் ஏற்றினார்.

லோ வீட்டுக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தபோது, திரு சியோ, லோவுக்கு அருகில் வசித்த திரு மைக்கலைச் சந்தித்தார். இருவரும் மறுபடியும் லோவின் வீட்டுக்கருகே காத்திருந்தனர்.

தனக்குக் களைப்பாக இருந்ததாக லோ கூறியபோதும் அவரைத் தன் பிறந்தநாளைக் கொண்டாட  திரு சியோ வற்புறுத்தினார். சம்பவம் நடந்த மறுநாள் லோவின் பிறந்தநாள்.  திரு சியோவின் வற்புறுத்தல்களுக்கு லோ இணங்கியதைத் தொடர்ந்து அம்மூவரும் ஜாலான் பெசாரிலுள்ள ஒரு மதுக்கூடத்திற்குச் சென்று இரவு முழுவதும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர்.

பின்னர், அதிகாலை நேரத்தில் அவர்கள் ஒன்றாக மதுக்கூடத்தைவிட்டுச் சென்றனர். லோ தனது லாரியை வேக வரம்பை மீறி ஓட்டிக்கொண்டிருந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அதிகாலை மூன்று மணிக்கு அந்த லாரி ஒரு மரத்தில் மோதி நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே திரு சியோவும் திரு மைக்கலும் மாண்டதாக அப்போது அங்கு சென்றிருந்த மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்டதற்கு முன், லோ ஒரு மணி நேரத்திற்கு 122 கிலோமீட்டர் வேகம் வரை தனது லாரியை ஓட்டிச் சென்றதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. இது, சாலையில் அனுமதிக்கப்படும் வேக வரம்பைவிட இரண்டு மடங்காக உள்ளது.

லோவின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் அவர் கெட்டமின் உள்ளிட்ட போதைப்பொருட்களை உட்கொண்டிருந்ததாகச் சோதனைகளின் வழி தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு அடுத்ததாக செப்டம்பர் 30ஆம் தேதி விசாரிக்கப்படும். மரணத்தை விளைவிக்கும் விதத்தில் முன்யோசனையின்றி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக லோவுக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

Loading...
Load next