வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரிப்பு

சிங்கப்பூரர்களுக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 3.2 விழுக்காடாக இருந்த அவ்விகிதம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் 3.3 விழுக்காடாக இருந்தது. அதேபோல, சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய உள்ளூர்வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் 3 விழுக்காட்டில் இருந்து 3.1 விழுக்காடாக ஏற்றம் கண்டது. ஜூன் மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.2 விழுக்காடாக நீடித்தது.

மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட வேலைச் சந்தை நிலவரம் குறித்த தரவுகள் இதனைத் தெரிவித்தன.

“பொருளியல் வளர்ச்சி மந்தமாக இருந்தாலும் இருக்கும் ஊழியர்களை நிறுவனங்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பது கவனமாக மேற்கொள்ளப்படுகிறது,” என்று அமைச்சின் அறிக்கை கூறியது.

தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தது. 2019 முதல் காலாண்டில் 57,100ஆக இருந்த அந்த எண்ணிக்கை இரண்டாம் காலாண்டில் 47,700ஆகச் சரிந்தது. இதன்காரணமாக, வேலையில்லாத ஒருவருக்கு 0.94 காலியிடமே இருந்தது. இந்த விகிதம் ஒன்றுக்கும் கீழே குறைந்திருப்பது கடந்த ஓராண்டு காலத்தில் இதுவே முதன்முறை.

வேலையிழந்தபின் ஆறு மாத காலத்திற்குள் வேறு வேலை தேடிக்கொண்டோரின் விகிதமும் கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்தது. இவ்வாண்டு முதல் காலாண்டில் 66.4 விழுக்காடாக இருந்த இவ்விகிதம், இரண்டாம் காலாண்டில் 60 விழுக்காடாக இறக்கம் கண்டது. அதேவேளையில், உள்ளூர்வாசிகளுக்கான நீண்டகால வேலையின்மை விகிதம் 0.7 விழுக்காடாக நீடிக்கிறது. இது, குறைந்தது 25 வாரங்களாக வேலையின்றி இருந்த உள்ளூர்வாசிகளின் விகிதத்தை குறிக்கிறது.

2018 முற்பாதியில் 5,350, பிற்பாதியில் 5,370ஆக இருந்த ஆட்குறைப்பு, இவ்வாண்டு முற்பாதியில் 5,550ஆக அதிகரித்தது. ஆட்குறைப்பு செய்யப்பட்ட உள்ளூர்வாசிகளில் 77 விழுக்காட்டினர் எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பிரிவைச் (பிஎம்இடி) சேர்ந்தவர்கள். இதனிடையே, இல்லப் பணிப்பெண்கள் தவிர்த்து, வேலை செய்வோரின் எண்ணிக்கை இவ்வாண்டு முற்பாதியில் 16,900 கூடியது. சென்ற ஆண்டின் முதல் பாதியில் இந்த எண்ணிக்கை 6,900ஆகவும் பிற்பாதியில் 31,400ஆகவும் இருந்தது.

மூன்றாண்டுகளில் இல்லாத ஒன்றாக, பணிப்பெண்கள் தவிர்த்த வெளிநாட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் உள்ளூர்வாசிகளுக்காக அவ்விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. 2018 இரண்டாம் பாதியில் 10,500ஆக இருந்த அந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜனவரி-ஜூன் வரைப்பட்ட காலகட்டத்தில் 11,600ஆக ஏற்றம் கண்டது. அவர்களில் 6,400 பேர் வேலை அனுமதிச்சீட்டு பெற்றவர்கள்.

முந்தைய இரு அரையாண்டுகளில் சரிவைச் சந்தித்த நிலையில், 2019 முற்பாதியில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு விகிதம் கூடியது. அத்துறையில் மேலும் 2,800 பேர் வேலையில் சேர்ந்தனர். இந்தக் காலகட்டத்தில், சேவைத் துறையில் மேலும் 19,000 ஊழியர்கள் இணைந்தனர். உள்ளூர்வாசிகளைப் பொறுத்தமட்டில், இவ்வாண்டு முற்பாதியில் மேலும் 5,300 பேர் வேலையில் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை 2018 முற்பாதியில் 6,500ஆகவும் பிற்பாதியில் 20,900ஆகவும் இருந்தது.

கடந்த ஆண்டின் முற்பாதியைக் காட்டிலும் ஆட்குறைப்பு அதிகமாக இல்லை என்றபோதும் இவ்வாண்டின் முற்பாதியில் வேலைச் சந்தை பலவீனமாகவே இருந்துள்ளது என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் துணைத் தலைவர் பேட்ரிக் டே, ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!