தனிநபர் நடமாட்டச் சாதனத்துடன் மோதவிருந்த நிலையில் கீழே விழுந்து அடிபட்ட பெண்ணுக்குத் தலையில் 30 தையல்

தனிநபர் நடமாட்டச் சாதனத்துடன் மோதவிருந்த நிலையில் கீழே விழுந்து அடிபட்ட ஒரு பெண்ணின் தலையில் 30 தையல் போடப்பட்டதோடு, நிரந்தரமான உட்குழிவும் ஏற்பட்டது. உடன்படிக்கை நிர்வாகியாகப் பணிபுரியும் 53 வயது திருவாட்டி இயோ எங் கூங், சென்ற ஆண்டு ஒரு மின்-ஸ்கூட்டருடன் மோதவிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி பின்பக்கமாக விழுந்ததில் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டியிருந்தது. 

“எனது மண்டை ஓட்டைத் திறந்து அறுவை சிகிச்சை செய்த பிறகு, அதனை மூடுவதற்கு என் தலையிலிருந்து காது வரை மொத்தம் 30 தையல் போடப்பட்டது. அதைப் பார்த்தபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்,” என்றார் திருவாட்டி இயோ. 

மின்-ஸ்கூட்டரின் ஓட்டுநரான 36 வயது தாம் சீ பூன், கவனக்குறைவான முறையில் ஓட்டிச்சென்று திருவாட்டி இயோவுக்குக் காயம் விளைவித்த குற்றத்தைப் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அவருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. 

தனியார் நிறுவனத்தில் மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் தாம், சென்ற ஆண்டு மார்ச் 29ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் தனது மின்-ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் உட்லண்ட்ஸ் அவென்யூ 5ன் புளோக் 362 அருகிலுள்ள சாலை சந்திப்பை நெருங்கியபோது, சாலையைக் கடந்து வந்திருந்த திருவாட்டி இயோவைத் திடீரென எதிர்கொண்டார். அவர் சட்டென மோதலைத் தவிர்த்து மின்-ஸ்கூட்டரை நிறுத்திய போதிலும், திடீரென ஒருவர் எதிர்ப்பட்டதால் அதிர்ச்சியடைந்த திருவாட்டி இயோ தடுமாறி விழுந்துவிட்டார். 

சாலை சந்திப்பைக் கடந்து சென்றபோது சத்தமான இசை தன்னை நெருங்கி வருவது கேட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தித்தாளிடம் திருவாட்டி இயோ கூறினார். மின்-ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டிருந்தபோது தாம் இசை கேட்டுக்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது அவர் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். 

கீழே விழுந்து தலையில் அடிபட்ட திருவாட்டி இயோ, சுமார் ஒரு நிமிடம் சுயநினைவில்லாமல் இருந்தார். பிற்பாடு அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது மூளையில் இரத்தக்கட்டு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  அறுவை சிகிச்சைக்குப் பிறகு போடப்பட்ட 30 தையல்கள், சுமார் 11 நாட்களுக்குப் பிறகு அகற்றப்பட்டன. 

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு திருவாட்டி இயோவுக்கு மூன்று மாத மருத்துவ விடுப்பு தரப்பட்டது.  சுமார் $18,000 மருத்துவச் செலவும், பல்லில் அடிபட்டதால் செய்த அறுவை சிகிச்சைக்கு மேலும் $4,900 செலவும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். 

சம்பவத்திற்குப் பிறகு தாம் மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக அவர் தெரிவித்தார். சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட போதிலும், இன்னமும் அடிக்கடி தலைவலி வருவதாகவும் எளிதில் சோர்வடைவதாகவும் அவர் கூறினார். இப்போதெல்லாம், தனது சுற்றுப்புறத்தின்மீது அவர் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக, எதிர்த்திசையில் மின்-ஸ்கூட்டர் வருவதைக் காணும்போது மிகவும் கவனமாக இருக்கிறார்.