கொடூரமாக மடிந்த இந்திய ஊழியர்; முதலாளிக்கு 140,000 வெள்ளி அபராதம்

ஊழியர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக  இருந்த போக்குவரத்து நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சு ஆக அதிகபட்சமாக 140,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி 1.5 டன் எடை கொண்ட கம்பி வலையால் இடிக்கப்பட்ட திரு வேணுகோபால் சரத்குமார் உயிரிழந்தார். அவரது மரணத்தின் தொடர்பில் ‘ஹியாப் சேங் லாரி எண்டர்பிரைசஸ்’  நிறுவனத்தின் தனி உரிமையாளர் ஓங் சின் சோங் என்பவருக்கு மனிதவள அமைச்சு அந்த அபராதத்தை விதித்தது. 

தனிநபர்கள் மீது தான் விதித்துவந்த அபராதங்களில் இந்தத் தொகை ஆக அதிகமானது என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ‘சன்வே கான்கிரீட் புரோடக்ஸ்’ நிறுவனத்திற்குக் கட்டுமான மூலப்பொருட்கள் சிலவற்றைக் கொண்டு சேர்க்குமாறு யூனிபேக் போக்குவரத்துச் சேவை நிறுவனம் ஓங்கைக் கேட்டுக்கொண்டது. திரு சரத்குமாருடனும் திரு தட்சினாமூர்த்தி கார்த்திக்குடனும் ஓங் கம்பி வலையை ஹியாப் சேங்கின் லாரியிலிருந்து பாரந்தூக்கி மூலம் இறக்கினார். ‘சன்வே கான்கிரீட் புரோடக்ஸ்’  நிறுவனத்தின் வளாகத்தில் இது நடந்தது.

ஓங்  இதற்காக  லாரி பாரந்தூக்கியைப் பயன்படுத்தியதுடன் இந்நடவடிக்கையை மேற்பார்வையிட்டார். கம்பி வலை தூக்கப்படும்போது அதனைச் சீரான நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு அவருடன் இருந்த அந்த இரண்டு ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

5.9 மீட்டர் நீளமாகவும் 1.35 மீட்டர் அகலமாகவும் இருந்த அந்தக் கம்பி வலை தூக்கப்பட்டிருந்தபோது ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது.  அதனை நேராக்க திரு சரத்குமாரும் திரு கார்த்திக்கும் பாதுகாப்புக் கையுறை ஏதுமின்றி வெறுங்கைகளால் முயன்றபோது அது கழன்றது. அந்த வலை திரு சரத்குமாரின் மீது விழுந்தது.

சம்பவ இடத்திலேயே திரு சரத்குமார் மாண்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். திரு சரத்குமாரின் தொண்டையைக் கம்பி வலை குத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. சம்பவத்தை விசாரித்த மனிதவள அமைச்சு, ‘ஹியாப் சேங் லாரி எண்டர்பிரைசஸ்’  பல்வேறு விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கண்டுபிடித்தது.