சிராங்கூன் கார்டன்ஸ் வட்டாரத்தில் மூவருக்கு ஸிக்கா

சிராங்கூன் கார்டன்ஸ் வட்டாரத்தில் மூவர் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதை தேசிய சுற்றுப்புற வாரியம் உறுதி செய்துள்ளது. மூவருக்கும் உள்ளூரிலேயே ஸிக்கா கிருமி தொற்றியுள்ளது. 

“குடியிருப்பாளர்களும் பங்குதாரர்களும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். கொசு இனப்பெருக்க இடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட வேண்டும். நமக்குத் தெரியாமல் சில கொசு இனப்பெருக்க இடங்கள் இருக்கலாம். அவற்றை அப்படியே விட்டுவிட்டால் மேலும் பலர் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்படக்கூடும்,” என்று வாரியம் எச்சரிக்கை விடுத்தது.

ஸிக்கா கிருமியால் சிராங்கூன் கார்டன்ஸ் வட்டாரத்தில் மூவர் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அவ்வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.

பிரிட்போர்ட் அவென்யூ, காவ்டிரே அவென்யூ, ஹடிங்டன் அவென்யூ, போர்ட்செஸ்டர் அவென்யூ, டெவிஸ்டோக் அவென்யூ ஆகிய வட்டாரங்களில் எட்டு பேருக்கு டெங்கி தொற்றிருப்பதாகக் கடந்த மாதம் தெரியவந்தது.

இந்த வட்டாரங்கள் சிராங்கூன் கார்டன்ஸ் வட்டாரத்துக்கு அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது. டெங்கி அபாயம் இருப்பது தெரியவந்ததும் அங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடந்து வருவதாக வாரியம் கூறியது. நேற்றைய நிலவரப்படி அப்பகுதியில் ஐந்து கொசு இனப்பெருக்க இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

Loading...
Load next