மின் ஸ்கூட்டரால் வந்த வினை: தலையில் 30 தையல்கள்

விரைந்து வந்த மின் ஸ்கூட்டர் தம்மீது மோதாமல் இருக்க திருவாட்டி இயோ எங் கூங் சட்டென்று நகர்ந்தபோது கீழே விழுந்தார். கீழே விழுந்த திருவாட்டி இயோவின் தலையில் அடிபட்டது. இதனால் 53 வயது திருவாட்டி இயோவின் மண்டையோட்டில் முறிவு ஏற்பட்டது

அறுவை சிகிச்சையின்போது திருவாட்டி இயோவுக்கு 30 தையல்கள் போடப்பட்டன. தையல்களால் ஏற்படும் தழும்புகளும் கீழே விழுந்து அடிபட்டதில் தலையில் விழுந்த குழியும் திருவாட்டி இயோவுக்கு நிரந்தரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு திருவாட்டி இயோ இரண்டு நாட்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்கு மூன்று மாத மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டது. மருத்துவச் செலவுக்காக ஏறத்தாழ $18,000, பல்மருத்துவ அறுவை சிகிச்சைக்காக $4,900 செலவு செய்ததாக திருவாட்டி இயோ கூறினார். இதற்கிடையே, மின் ஸ்கூட்டரைக் கவனக்குறைவுடன் ஓட்டி திருவாட்டி இயோவுக்குப் படுகாயம் விளைவித்த குற்றத்தை 36 வயது தாம் சீ பூன் ஒப்புக்கொண்டார்.  

அவருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தில் மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் திரு தாம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.