ஊழியர் மரணத்துக்குக் காரணமாக இருந்தவருக்கு $140,000 அபராதம்

ஊழியரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த போக்குவரத்துச் சேவை நிறுவனத்தின் உரிமையாளருக்கு மனிதவள அமைச்சு $140,000 அபராதம் விதித்துள்ளது. 

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட ஆக அதிகமான அபராதத் தொகை இது. தமது ஊழியர்களின் பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை ஹியாப் செங் லாரி என்டர்பிரைஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஓங் சின் சோங் உறுதி செய்யவில்லை என்பதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதியன்று நிகழ்ந்த சம்பவம் காரணமாக அந்த ஊழியர் மாண்டார்.

சம்பவம் நிகழ்ந்த நாளன்று திரு ஓங்குடன் அவரது ஊழியர்களான திரு வேணுகோபால் சரத்

குமாரும் திரு தட்சணாமூர்த்தி கார்த்திக்கும் சன்வே கான்கிரீட் புரோடக்ஸ் நிறுவனத்துக்கு கம்பிகளை விநியோகம் செய்ய சென்றிருந்தனர்.

திரு ஓங்கின் லாரியில் இருந்த பாரந்தூக்கியைப் பயன்படுத்தி கம்பிக் கட்டுகள் இறக்கப்பட்டன. பாரந்தூக்கியைத் திரு ஓங் இயக்கினார். 5.9 மீட்டர் நிளம், 1.35 மீட்டர் அகலம் கொண்ட கம்பிக் கட்டு இறக்கப்பட்டபோது அது ஒரு பக்கமாகச் சாய்ந்தது. வெறுங்கைகளைப் பயன்படுத்தி அந்தக் கம்பிக் கட்டை நேராக்க திரு சரத்குமாரும் திரு கார்த்திக்கும் முயன்றனர்.

அப்போது கம்பிக் கட்டைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சங்கிலி அறுந்தது. கீழே நின்றுகொண்டிருந்த திரு சரத்குமார் மீது அந்த 1.5 டன் எடை கொண்ட கம்பிக் கட்டு விழுந்தது. 

திரு சரத்குமார் சம்பவ இடத்தில் மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

கட்டில் இருந்த கம்பி ஒன்று திரு சரத்குமாரின் தொண்டையைக் கிழித்துக்கொண்டு உள்ளே சென்றதாக சம்பவத்தின் நேரில் கண்ட ஊழியர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. 

கம்பிக் கட்டைத் தூக்க பயன்படுத்தப்பட்ட சங்கிலியின் தரத்தைச் சரிபார்க்க திரு ஓங் தவறியதாக மனிதவள அமைச்சு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அதுமட்டுமல்லாது, இத்தகைய பணிகளில் ஈடுபட தமது ஊழியர்களுக்கு அவர் பயிற்சி அளிக்கவில்லை என்றும் தெரிய வந்தது.