போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 159 பேரை 12 நாட்களுக்கு நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கைது செய்தது.
கைது செய்யப்பட்டோரில் ஏழு பேர் பதின்மவயதினர். அவர்கள் 13லிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள். ஃபாஜார் சாலையில் உள்ள ஓர் இடத்தில் பலர் கும்பலாகப் போதைப்பொருள் உட்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
அந்த இடத்தில் இருந்த இந்த இளையர்களும் பிடிபட்டனர். அவர்களுடன் சேர்ந்து நான்கு பிள்ளைகள் கொண்ட தம்பதியரும் கைது செய்யப்பட்டனர். அவ்விடத்திலிருந்து பலவகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிரடி நடவடிக்கை இம்மாதம் 2ஆம் தேதியிலிருந்து வெள்ளிக்கிழமை ( செம்டம்பர் 13) காலை வரை கேலாங், சிராங்கூன், தோ பாயோ, உட்லண்ட்ஸ் முதலிய வட்டாரங்களில் நடத்தப்பட்டது. கைதானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

