ஒருவரை நையாண்டி செய்தல் இணையம்வழி பொய்ச்செய்திகளுக்கு எதிரான சட்டத்துக்கு உட்படாது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
"நையாண்டி செய்தலை பொஃப்மா எனப்படும் இணையவழிப் பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்துக்கு உட்பட்டது என்று கூறப்படுவது தவறானது," என்று அமைச்சர் கூறினார்.
ஊடகக் கல்வியறிவு மன்றம் அண்மையில் தனது ஃபேஸ்புக் பதிவில் நையாண்டி செய்தலை பொய்ச்செய்தி தொடர்பான புதிய சட்டத்துடன் தொடர்புபடுத்தி குறிப்பிட்டிருந்தது குறித்து இணையவாசிகளிடையே குழப்பம் ஏற்பட்டது.
அது தொடர்பாக செய்தியாளர்கள் நேற்று முன்தினம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திரு சண்முகம், "பொய்யான விவரங்கள் அடங்கிய தகவல்கள் மட்டும்தான் பொஃப்மா சட்டத்துக்கு உட்படுத்தப்படும். இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நான் தெளிவுபடுத்தி யுள்ளேன்," என்று கூறினார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை ஊடகக் கல்வியறிவு மன்றம் தனது ஃபேஸ்புக் பதிவில், ஒரு வரைகலைப் படத்தைக் காட்டி அதில் ஆறு விதமான பொய்ச்செய்தி யாவை என்பதைச் சுட்டிக்காட்டியது.
அதில் தவறான சூழல், வஞ்சக உள்ளடக்கம், கையாளப்பட்ட உள்ளடக்கம், தவறான உள்ளடக்கம், மக்களை ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கத்துக்கு ஈர்க்கும் முயற்சி, நையாண்டி ஆகியவை பொய்ச்செய்திகளின் உதாரணங்கள் என்று மன்றம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை மன்றத்தின் இந்தப் பதிவுக்கு 250 கருத்துகள் குவிந்தன. அதில் மன்றத்தின் பதிவைக் குறை கூறியதுடன் நையாண்டி செய்தல் புதிய சட்டத்துக்கு உட்படாதது என்று விளக்கியும் மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மன்றம் தனது பதிவை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அகற்றியது.
ஊடகக் கல்வியறிவு மன்றம் பற்றி கருத்துரைத்த அமைச்சர், "அதில் மக்களுக்கு பல வழிகளில் உதவும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்ல வந்தார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
"ஒன்று, அவர்கள் தவறிழைத்திருக்கலாம் அல்லது அவர்கள் சொல்ல வந்ததை சரிவர சொல்லத் தவறிவிட்டார்கள். துரதிருஷ்டவசமாக, இது பொஃப்மா சட்டத்தின் சரியான பிரதிபலிப்பாக அமையவில்லை," என்று நேற்று முன்தினம் இரவு ஈசூன் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்துக்கு வருகையளித்தபோது செய்தியாளர்களிடம் திரு சண்முகம் பேசினார்.
தொடர்பு, தகவல் அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஊடகக் கல்வியறிவு மன்றம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று தனது தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
தங்களது பதிவும் தகவல் வரைகலையும் நையாண்டி தொடர்பான தவறான உணர்வை ஏற்படுத்தி விட்டது என்று மன்றம் கூறியது.

