95,000 புதிய வேலைகள் உருவாக்கப்படலாம்

ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தின் பெருந்திட்டம் சிங்கப்பூருக்கு முக்கியமானது. அது பொருளியலில் அங்கம் வகிக்கும் மேம்பட்ட உற்பத்தித்துறைக்கான அடுத்த கட்ட வளர்ச்சியின் ஒரு பகுதி என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

“ஜூரோங் புத்தாக்க வட்டாரம் முழுமையாக நிறைவுபெற்றதும், கிட்டத்தட்ட 95,000 புதிய வேலைகள் உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“துப்புரவுத் துறை, மேம்படுத்தப்பட்ட  வசதிகள் துறை ஆகிய வற்றில் மிக புதிய, நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறினார் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்ச ருமான திரு தர்மன்.

மேம்பட்ட உற்பத்தித் துறையின் புதிய மையத்தை ஜூரோங் வெஸ்டில் உருவாக்கும் முயற்சியில் ஜூரோங் நகராண்மைக் கழகமும் (ஜேடிசி) சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் கைகோத்துள்ளன. 

இதன்மூலம் இத்துறையில் ஆற்றல்மிக்க திறனாளர்களை உருவாக்க அவை எண்ணம் கொண்டுள்ளன.

தொழில்துறை பங்காளிகளுடன் சேர்ந்து தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குதல், நிறுவனங்களுக்கு ஊழியரணிப் பயிற்சிகளை நடத்துதல் ஆகியவற்றில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி இணைந்து பணியாற்றும். 

நிறுவனங்களின் செயல்பாடுகளை மறுவடிவமைத்து, அவை தொழில்நுட்பத்துக்கு மாறவும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி உதவிக்கரம் நீட்டும்.

மாணவர்கள், நிபுணத்துவ தொழிலர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு வேலை-கல்வித் திட்டங்களை ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி அறிமுகப்படுத்தும். 

அடுத்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் 400 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள்.

தானியக்கம், செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு போன்ற தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளும் இவ்வட்டாரத்தில் உருவாக்கப்படும் என்றும் ஜேடிசி தெரிவித்தது.

புத்தாக்க வட்டாரத்தில் தெங்கா, பாஹார், கிளீன்டெக் பார்க், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு  பகுதிகளை இணைக்கும் பூலிம் பேட்டையும் இடம்பெறும்.