பொது இடங்களில் தனிநபர் நடமாட்ட சாதன தடை: கவலையில் பயனாளர்கள்

பொது இடங்களில் தனிநபர் நடமாட்ட சாதன தடை: கவலையில் பயனாளர்கள்

2 mins read
f33c7a65-2b3c-40a4-9d40-7af640e98b1d
ST PHOTO: KELVIN CHNG -

வீவக குடியிருப்புகளின் பொது இடங்களில் தனிநபர் நடமாட்ட சாதனங்கள், சைக்கிள்கள், மின் சைக்கிள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பயனாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உணவு விநியோகிப்பாளரான 32 வயது ஷாருல்நிசான் ரம்லி வார இறுதிநாட்களில் தமது இரு பிள்ளைகளையும் தெம்பனிஸ் வீவக வட்டாரத்தில் சைக்கிளில் அழைத்துச் செல்வார். புதிய தடையினால் $5,000 அபராதம் செலுத்த வேண்டி வருமோ என அவர் கவலை கொண்டுள்ளார்.

"இந்தப் புதிய சட்டத்தினால் நான் விரக்தியடைந்துள்ளேன். பொறுப்பில்லாத சில பயனாளர்களால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்," என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

புதிய தடையின்கீழ், வீவக குடியிருப்பின் தரைத்தரம், விளையாட்டு இடம், பொதுத் தாழ்வாரங்கள், விளையாட்டுப் பகுதிகளில் இந்த வாகனங்களை ஓட்டக்கூடாது.

பொறுப்பற்ற வாகனமோட்டிகளைக் கண்காணிக்க கிட்டத்தட்ட 70,000 மின்தூக்கி கண்காணிப்பு கேமராக்களும் சிசிடிவி கேமராக்களும் வீவக அடுக்குமாடி வீடுகளின் மின்தூக்கிகளிலும் தரைத்தளங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

செப்டம்பர் முதல் தேதி நடப்புக்கு வந்த இந்தத் தடை குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை நடத்திய நேர்காணல்களில், சைக்கிள்களும் இந்தத் தடையில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து சில சைக்கிளோட்டிகள் கேள்வி எழுப்பினர்.

மக்கள் செயல் கட்சியின் கீழுள்ள 15 நகர மன்றங்களில் இந்தத் தடை நடப்பில் உள்ளது.

பயனாளர்கள் புதிய சட்டதிற்குப் பழக்கமாவதற்காக இருமாத கால அவகாசம் வழங்கப்படும் என்று செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நகர மன்றங்கள் தெரிவித்திருந்தன.

இந்தக் கால கட்டத்தில் முதல் முறை குற்றம்புரியும் வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும்.

அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பின்னர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர மன்றங்கள் தெரிவித்தன.

மின் சக்கர நாற்காலிகள், சிறுவர்களின் விளையாட்டு வாகனங் கள் போன்ற தனிநபர் நடமாட்ட உபகரணங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தத் தடை தேவை என நகர மன்றங்கள் குறிப்பிட்டன. எனினும், சைக்கிள் ஓட்டப் பழகும் சிறுவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என சில நகர மன்றங்கள் தெரிவித்தன.

"எங்களுக்குக் கிடைத்த கருத்துக் கணிப்புகளின்படி பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இந்தத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்," என்று மசெகவின் 15 நகர மன்றங்களையும் மேற்பார்வையிடும் டாக்டர் டியோ ஹோ பின் கூறினார்.

புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே, பொது இடங்களில் சைக்கிளோட்டுவது நகர மன்ற விதிமுறைகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்த மாட்டார்கள் என்ற கட்டுப்பாட்டின்கீழ் நகர மன்றங்கள் சில விதிவிலக்குகளை அளிக்கும் என்றார் அவர்.

உதாரணமாக, சைக்கிளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போலிஸ்காரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒவ்வொரு நகர மன்றமும் அதன் குடியிருப்பாளர்களின் கருத்துகளைக் கேட்டு, நிலைமையை ஆராய்ந்து எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் டாக்டர் டியோ.