பருவநிலை மாற்ற விழிப்புணர்வில் உலக ஊடகங்கள்

பருவநிலை மாற்ற விழிப்புணர்வில் உலக ஊடகங்கள்

2 mins read
da822ec3-842a-45d8-9703-aff1d12d39ea
-

உலகப் பருவநிலை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் எஸ்பிஎச்சின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த 250 ஊடகங்கள் ஒன்றுபட்ட முயற்சியில் ஈடுபடுகின்றன. அதையொட்டி, பருவநிலை மாற்றங்கள் தொடர்பான செய்திகளை அவை அதிகரிக்கவுள்ளன. கொலம்பியா ஜெர்னலிசம் ரிவியூ, அமெரிக்காவின் தி நேஷன் ஆகியவை இணைந்து, உலக ஊடகங்களில் ஒரு வார காலத்துக்கு பருவநிலை தொடர்பான செய்திகளை வெளியிடும் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.

பிரிட்டனின் தி கார்டியன் பத்திரிகை முன்னணி ஊடக பங்காளியாகக் கொண்ட இந்த முயற்சியில் பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி, வானொலி, இணைய ஊடகங்களில் பருவநிலை தொடர்பான செய்திகள் வெளியிடப்படவுள்ளன. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை உச்சநிலை மாநாட்டை ஒட்டி ஒரு வார காலத்துக்கு அது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்.

இதையொட்டி இன்று முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு இந்த இயகத்தில் பங்கேற்கும் ஊடக உறுப்பினர்கள் செய்திகளை இலவசமாகப் பகிர்ந்து கொள்ளலாம். பங்கேற்கும் ஊடகங்கள் ஏற்கெனவே அதிகளவிலான பல்லூடக செய்திகளைப் பகிரத் தயார்படுத்தியுள்ளன.

கடந்த 2015 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐநாவின் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டின் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் அதிக முக்கியமான இந்த உச்சநிலை மாநாட்டில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உட்பட உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

உலக வெப்பநிலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படும் கரிம வெளியேற்றத்தை 2020க்குள் குறிப்பிட்ட அளவு குறைக்கும் தேசிய முயற்சிகளை மேம்படுத்தும் திட்ட விவரங்களை அளிக்குமாறு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த பத்தாண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை 45% குறைத்து, 2050க்குள் கரிம வெளியேற்றமே இல்லாமல் செய்யும் வகையில் அந்தத் திட்டங்கள் இருக்க வேண்டும் என்று ஐநா கூறியுள்ளது. இதைச் செய்யத் தவறினால், மோசமான வறட்சி, காட்டுத் தீ, புயல், விளைச்சல் பாதிப்பு, பவளப் பாறைகள் அழிவு, கடல் மட்டம் உயர்வு போன்ற ஆபத்துகளால் உலகம் பாதிக்கப்படும்.

முன்னெப்போதையும்விட, இப்போது அதிகமாக நிலக்கரி எரிவாயு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் எரிபொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மறுபயனீடு செய்யக்கூடிய, சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காத போக்குவரத்து, எரிசக்தியை சேமிக்கும் கட்டடங்கள், உணவு விரயத்தைக் குறைப்பது, அமேசான், தென் கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் காடுகள் அழிவதைத் தடுப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று ஐநா கூறியது.