மசேநி செலுத்தத்தவறிய முதலாளிகளிடமிருந்து 5 ஆண்டுகளில் $2.7 பில்லியன் மீட்பு

மத்திய சேமநிதிக் கழகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய சேமநிதி (மசேநி) செலுத்தத் தவறிய முதலாளிகளிடமிருந்து கிட்டத்தட்ட $2.7 பில்லியன் வரை மீட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் $595.9 மில்லியன் மீட்கப்பட்டது. இது, 2014ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட $378.2 மில்லியனைவிட அதிகம். இந்தப் பிரச்சனை ஓயவில்லை என்பதை இது காட்டுகிறது.

மசேநி கழகம் தணிக்கைகள் நடத்தியும் புகார்களின் தொடர்பில் நடவடிக்கை எடுத்தும் பணத்தை மீட்டது. விரிவான விவரம் கிடைக்காதபோதிலும், பெரும்பாலும் குறைந்த வருமானம் ஈட்டும் நாட்கூலித் தொழிலாளர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். வாரத்தில் சில நாட்கள் பாதுகாவலராகப் பணிபுரியும் 58 வயது திருவாட்டி ஜோசஃபின் மேரி, சம்பளத்தை உடனுக்குடன் பெற்றுவிடுகிறார். ஆனால், சம்பளச்சீட்டை அல்லது மசேநி சந்தாவைப் பெறுவதற்கு முதலாளிகளை அவர் அடிக்கடி நெருக்க வேண்டியிருக்கிறது.

இப்போதெல்லாம், மசேநி சந்தா செலுத்தாத நிறுவனங்களை அவர் தவிர்க்க முயல்கிறார்.

“இப்போது இது பரவலாகி வருகிறது. எனக்குரிய $13 மசேநி சந்தாவை ($100 வேலைக்குரியது) ஏன் செலுத்தமாட்டேன் என்கிறீர்கள் என இந்நிறுவனங்களிடம் நான் சில சமயங்களில் கேட்கிறேன். அது வெறும் 13 வெள்ளியாக இருந்தாலும், எனக்கு அது இரண்டு வேளை உணவு,” என்றார் வளர்ந்த இரு மகள்களின் தாயான திருவாட்டி மேரி.

மாதத்திற்கு 50 வெள்ளிக்கு மேலாகச் சம்பளம் பெறும் தொழிலாளருக்கு முதலாளி மசேநி சந்தா செலுத்தவேண்டும். தொழிலாளரின் சம்பளம் மாதத்திற்கு 500 வெள்ளிக்கு மேலாக இருந்தால், தொழிலாளரும் மசேநி சந்தா செலுத்தவேண்டும்.

பாதுகாவல் துறை தவிர, உணவு பானத் துறை போன்ற மற்ற துறைகளிலும் நாட்கூலித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். “உணவு பானத் துறையில் இது சகஜமாகக் காணப்படுகிறது. தொழிலாளர்களுக்கு மசேநி இல்லாமல் ரொக்கமாகச் சம்பளம் தரப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் ஈட்டும் உள்ளூர் தொழிலாளர்கள்,” என நாடாளுமன்ற உறுப்பினர் சைனால் சபாரி கூறினார்.

ஆனால், சில தொழிலாளர்கள் மசேநி கிடைக்காததை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை.

“நான் மசேநி பற்றி நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, எனக்கு ரொக்கமாகச் சம்பளம் கிடைத்தாலே போதுமானது. நான் கேளிக்கைக்காக மட்டுமே அவ்வப்போது வேலை செய்கிறேன்,” என்றார் 29 வயது திரு அஸ்னான் அஸீஸ்.

குறித்த நேரத்தில் சம்பளமும் மசேநி சந்தாவும் செலுத்தத் தவறும் பாதுகாவல் நிறுவனத்தில் வேலை செய்யும் 58 வயது திரு கணேசன், மாதந்தோறும் மசேநி சந்தாவுடன் சம்பளம் பெறுவதற்குப் பதிலாக வாரந்தோறும் மசேநி சந்தா இல்லாமல் சம்பளம் பெறவே விரும்புகிறார்.

“நிறுவனங்கள் சில சமயங்களில் மசேநி சந்தா செலுத்துவதில்லை அல்லது தாமதமாகச் செலுத்துகின்றன என்பதையெல்லாம் கேள்விப்படுகையில், இந்நிலைமையைத் தவிர்க்கவே நான் விரும்புகிறேன். அதனால்தான் தினமும் அல்லது வாரந்தோறும் சம்பளம் பெற விரும்புகிறேன். இதன்வழி நிலைமையை என்னால் கட்டுப்படுத்த முடியும். அவர்கள் சம்பளம் தராவிட்டால், நான் வேலைக்குச் செல்லமாட்டேன்,” என்றார் அவர்.

நாட்கூலி பெறும் தொழிலாளர்களுக்கு மசேநி சந்தா செலுத்தப்படவேண்டுமா என்பதும் அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.

இந்தப் பிரச்சனைக்கு எளிய தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. மனிதவள அமைச்சிடம் செல்வது சிரமம் என்றும், நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் என்றும் தொழிலாளர்கள் நினைப்பதாக முன்னாள் பாதுகாவலர் திரு கே. டேவிட் கூறினார். ஆனால், மசேநி சந்தா செலுத்தத் தவறிய முதலாளிகள் எல்லோருமே வேண்டுமென்றே அவ்வாறு செய்வதில்லை. சந்தாவைக் கணக்கிடும்போது தவறு செய்துவிட்டதை உணர்ந்து, தாமாகவே மசேநி கழகத்திடம் தெரியப்படுத்திய முதலாளிகளும் இருக்கின்றனர்.

மசேநி சந்தா பெறாத தொழிலாளர்கள் வேலைநலன் துணை வருமானத் திட்டத்திற்குத் தகுதி பெறமாட்டார்கள் என திரு சைனால் நினைவுபடுத்தினார்.

இத்திட்டத்தின்கீழ், குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் ரொக்கமாகவும் தங்களது மத்திய சேமநிதி கணக்குகளிலும் பணம் பெறுவார்கள். மசேநி சட்டத்தின்படி செயல்படத் தவறும் முதலாளிகளுக்கு $5,000 வரையிலான அபராதம், ஆறு மாதம் வரையிலான சிறை, அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

தொழிலாளரின் சம்பளத்திலிருந்து மசேநி சந்தாவைக் கழித்துவிட்டு, அதனை மசேநி கழகத்திடம் செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு $10,000 வரையிலான அபராதம், ஏழு ஆண்டு வரையிலான சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!