ஜோகூரில் அதிரடி சோதனை; கைதான 21 கடன் முதலைகள்

ஜோகூரில் அதிரடி சோதனை; கைதான 21 கடன் முதலைகள்

2 mins read
186ef663-1c8d-45d3-9f8f-ed15bc5eb076
-

மலேசியாவின் ஜோகூர் பாருவில் கடந்த சில நாட்களாக ஒரு பெண் உட்பட 21 பேரை போலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோதமாகக் கடன் கொடுக்கும் மூன்று பெரிய கும்பல்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதை அடுத்து மிகப்பெரிய கடன்முதலைகள் சிலர் பிடிப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

ஜோகூரில் சகல வசதிகளுடன் சொகுசாக வாழும் இந்தக் கடன்முதலைகளை நாடும் வாடிக்கையாளர்களில் பலர் சிங்கப்பூரர் என்று த ஸ்டார் நாளிதழ் குறிப்பிடுகிறது. இந்தக் கடன்முதலைகள் ஆண்டுக்கு 24 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரையிலான வட்டியைப் பெற்று கடன் கொடுக்கின்றனர். புக்கிட் அமானின் வர்த்தகக் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் ஜோகூர் போலிசாரும் இணைந்து வழிநடத்திய அதிரடி நடவடிக்கையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட போலிஸ் பிரிவுகள், ஒரே நேரத்தில் இஸ்கந்தர் புத்ரி, செரி அலாம், செட்டியா இன்டா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தின. கடன்முதலை தொல்லையால் ஜோகூரில் பாதிக்கப்பட்டவர்கள் செய்த பத்துக்கும் அதிகமான புகார்களின் அடிப்படையில் அந்தச் சந்தேக நபர்கள் பிடிபட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சந்தேக நபர்கள் வசமிருந்த கைபேசிகள், கணினிகள், வாகனங்கள், வங்கி அட்டைகள், வங்கிப் பரிவர்த்தனை புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், ரொக்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றோடு, கடன் தொடர்பான கணக்கு விவரங்களைக் காட்டும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோகூரில் இவ்வாண்டு இரண்டாவது முறையாக கடன் முதலைகளுக்கு எதிராக திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு முன்னதாக மே மாதத்தில் ஜோகூரில் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் குறைந்தது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்