பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் என்டியுசி ஃபேர்பிரைசின் ஒரு மாத கால சோதனை முயற்சிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சோதனைத் திட்டத்தின் முதல் நாளான நேற்று, ஏழு ஃபேர்பிரைஸ், சியர்ஸ் கடைகளில் வாடிக்கையாளர்கள் நெகிழிப் (பிளாஸ்டிக்) பைகளுக்கு 10 காசு முதல் 20 காசு வரை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
'நெகிழிப் பைகளைத் தவிர்ப்போம்' என்ற இந்தச் சோதனை முயற்சி, பொருட்கள் வாங்க வரும்போது வாடிக்கையாளர்கள் சொந்தமாகப் பைகளை எடுத்து வருவதை ஊக்குவிக்கும் என்று அறிக்கை மூலம் ஃபேர்பிரைஸ் தெரிவித்துள்ளது.
'ஹவ்காங் ஒன்' கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, 'ஸொங்ஷான் பார்க்' கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், 'மேப்பல் ட்ரீ 18' கடைத்தொகுதியில் இருக்கும் ஃபேர்பிரைஸ் பேரங்காடி, லோரோங் சுவானில் அமைந்துள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ், செங்காங் சமூக மருத்துவமனை, க்ரியேட் வே, அல்ஜுனிட் ரோடு ஆகிய இடங்களிலுள்ள 'சியர்ஸ்' கடைகள் ஆகிய ஏழு கிளைகளில் இந்தச் சோதனை முயற்சி இடம்பெறும்.
இவற்றுள், ஃபேர்பிரைஸ் பேரங்காடி, ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா ஆகியவற்றில் நெகிழிப் பைகளுக்கு 20 காசும் சியர்ஸ் மற்றும் ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் கடைகளில் 10 காசும் வசூலிக்கப்படும்.
கட்டணம் செலுத்துவோர் அதிகப்படியான பொருட்களை வாங்கினால் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் தரப்படும்.
இதன்மூலம் வசூலாகும் தொகை, சிங்கப்பூர் சிறுவர் சங்கத்திற்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதிக்கும் நன்கொடையாக வழங்கப்படும்.
நெகிழிப் பை பயன்பாடு தொடர்பில் பயனீட்டாளர் உணர்வு குறித்த ஒரு கருத்தாய்வையும் ஃபேர்பிரைஸ் மேற்கொள்ளும்.
அத்துடன், நெகிழி மற்றும் உணவுக் கழிவைக் குறைப்பது தொடர்பில் சிங்கப்பூரர்களின் பரிந்துரைகளையும் ஃபேர்பிரைஸ் வரவேற்கிறது.
ஏற்றுக்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதியாதரவு அளிப்பதற்காக 'ஃபேர்பிரைஸ் நிலைத்தன்மை நிதி' என்ற பெயரில் $1 மில்லியன் நிதித் திட்டத்தை ஃபேர்பிரைஸ் அறிமுகப்படுத்தியது.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 30 மில்லியன் பிளாஸ்டிக் பைகளைச் சேமிக்க வேண்டும் என்ற தனது இலக்கை அடைய இத்தகைய முயற்சிகள் துணைபுரியும் என்று ஃபேர்பிரைஸ் கூறியது.
வாடிக்கையாளர்களுக்கு சிரமமில்லாமல் இருக்கும் என்பதற்காக ஒவ்வொரு பைக்கும் கட்டணம் என்று இல்லாமல், ஒவ்வொரு முறை பொருள் வாங்குவதற்கும் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று பேர்பிரைசின் தலைமை நிர்வாகி திரு சியா கியான் பெங் கூறினார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிட சிங்கப்பூரில் நெகிழிப் பைகளின் நிலைமை மாறுபட்டது. சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளுக்கு பயன்பாடு உள்ளது. மேலும் இங்கே வேறு வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றுகிறோம். அவை முதலில் எரிக்கப்பட்டு, பின்னரே நிலம் நிரப்பும் கழிவுடன் சேர்க்கப்படுகின்றன என்றார் அவர்.
இந்தச் சோதனை முயற்சி மூலம் இரு தகவல்களைச் சொல்ல விரும்புவதாக அவர் சொன்னார். அவை, ஒன்று சொந்தப் பைகளை எடுத்துவர முயற்சி செய்வது. அப்படியே பிளாஸ்டிக் பை தேவைப்படும்போது, குறைந்த அளவிலான பைகளைக் கொண்டு வருவது.

