தங்கள் வர்த்தகத்தை வளர்க்க சிங்கப்பூரில் தளம் அமைக்கும் சிறிய, பெரிய உலக இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் இந்நாட்டின் தொழில்நுட்ப வலிமை, திறன்மிக்க மனித வளம், கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக அளவில் இணையப் பாதுகாப்பு முக்கியமானது என்பதால், பல நாடுகளுடன் கூடிய ஒத்துழைப்புக்கு இந்த நிறுவனங்கள் சிங்கப்பூரின் உலகளாவிய கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ கூறினார்.
'என்சைன் இன்ஃபோசெக்யூரிட்டி' எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகத்தின் தொடக்கவிழாவில் அமைச்சர் டியோ பேசினார்.
ஸ்டார்ஹப் தொலைத்தொடர்பு நிறுவனம், அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக் ஹோல்டிங்ஸ் ஆகியவை இணைந்து கடந்த ஆண்டு இந்நிறுவனத்தைத் தொடங்கின.
சிங்கப்பூரில் சேவை வழங்க அல்லது இந்த வட்டாரத்துக்கு சேவையாற்றுவதற்கு சிங்கப்பூரைத் தளமாகக் கொள்ள வெளிநாட்டு இணையப் பாதுகாப்பு நிறுவனங்களை சிங்கப்பூர் வரவேற்கிறது.
சிங்கப்பூரின் மனிதவளம், தொழில்நுட்ப நிபுணத்துவம், கட்டமைப்புகள் ஆகியவற்றுடன் சிங்கப்பூருக்குள்ள இந்த வட்டாரம் குறித்த புரிந்துணர்வையும் பயன்படுத்தி இணைந்து பணியாற்ற சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் டியோ சீ ஹியன் கூறினார்.
அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திய நிறுவனத்திற்கு உதாரணமாக 'என்சைன்' நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக, சிஜினா, கிளாரொடி, அயர்ன்நெட் போன்ற பல உலக இணைய பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து அதிநவீன இணைய பாதுகாப்பு தீர்வுகளைக் கண்டறிய, அந்நிறுவனம் தெமாசெக்கின் கட்டமைப்பைப் பயன் படுத்துகிறது என திரு டியோ கூறினார்.
சிங்கப்பூருக்குத் தேவையான உலகத் தரம் வாய்ந்த இணைய பாதுகாப்பு திறன்களை உருவாக்குவதற்கு மக்கள், புத்தாக்கம், கூட்டுமுயற்சிகள் ஆகியவை மிக முக்கியம்.
இது சிங்கப்பூரின் புதிய தொழிலாக உருவெடுக்கலாம். 'என்சைன்' இந்த மூன்று முனைகளிலும் முயற்சிகள் மேற்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார் மூத்த அமைச்சர்.
நிறுவனங்கள், அரசாங்கங்களுக்கான இணைய பாதுகாப்பு தீர்வுகளை உலகளவில் வழங்கும் 'என்சைன்' நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் அதன் ஊழியரணியை 100 ஆக அதிகரிக்க உள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் இணைய அச்சுறுத்தல்களை விரைவாகவும் அதிக துல்லியமாகவும் கண்டறிந்து, அதனைக் குறைக்கும் நோக்கில் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை (எஸ்ஓசி) இந்நிறுவனம் அமைத்துள்ளது.
புதிதாக சேர்க்கப்படவுள்ள ஊழியர்கள் ஏற்கெனவே தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 500 ஊழியர்களுடன் இணைந்து, இணைய அச்சுறுத்தலைக் கண்டறிவதிலும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவலைத் திரட்டுவதிலும் நிறுவனத்தின் ஆற்றல்களைப் பெருக்குவார்கள் என 'என்சைன்' தெரிவித்தது.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் உள்ள எங்கள் பங்குதாரர்களுக்கு பாதுகாப்பு தீர்வுகள், சேவைகளையும், அதனால் ஏற்படும் பயன்களையும் உலகத் தரமான இணைய பாதுகாப்பு நிபுணத்துவம் மற்றும் புத்தாக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் ஒரு நிறுவனத்தை எங்கள் பங்காளிகளுடன் இணைந்து உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் என்று 'என்சைன்' நிறுவனத்தின் தலைவர் லீ ஃபூக் சன் தெரிவித்தார்.
நேற்று தொடங்கப்பட்ட புதிய மையம் தரவுப் பகுப்பாய்பு, செயற்கை நுண்ணறிவை பெரிய அளவில் பயன்படுத்தி, சிங்கப்பூரை மையமாகக் கொண்ட உடனடியான மற்றும் வரக்கூடிய இணைய அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களைத் திரட்டும்.
அண்மைக் காலமாக வெளிநாட்டு இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் அலுவலகங்களை அமைத்து வருகின்றன.

