வாத நோயாளியை மானபங்கப்படுத்திய 78 வயது முதியவருக்குச் சிறை

வாத நோயாளியை மானபங்கப்படுத்திய 78 வயது முதியவருக்குச் சிறை

1 mins read

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு தாதிமை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது மனைவியைப் பார்க்க கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி சென்றபோது, தாதிமை இல்லத்தின் பொதுக் கூடத்தில் சக்கரநாற்காலியில் அமர்ந்த வாறு தனியாக இருந்த 37 வயது பெருமூளை வாத நோயாளியை மானபங்கப்படுத்திய 78 வயது லாவ் லொய் ஃபாட்டுக்கு நேற்று எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடல் நலிவுற்ற நிலையில் இரு கைகளிலும் கட்டு போடப்பட்டிருந்த அந்தப் பெண்ணுக்கு சற்று தூரத்தில், இல்லத்தில் உள்ள மற்ற 30 பேர் உடற்பயிற்சி சிகிச்சையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு கரப்பான்பூச்சி அந்த வாதநோயாளியின் நெஞ்சுப் பகுதிக்கு அருகே பறந்து கொண்டிருந்ததைப் பார்த்த திரு லாவ், அந்தப் பூச்சியைத் தட்டிவிட அருகில் சென்றார். அப்போது தன் நிலையை மறந்து அந்த முதியவர், அந்தப் பெண்ணின் உடைக்குள் கையைவிட்டு, அவரது மார்பகங்களைத் தொட்டார்.

இதை தூரத்திலிருந்து கவனித்த உடற்பயிற்சி உதவியாளர் அங்கிருந்த உதவித் தாதியிடம் சொல்ல, அவர் உரத்த குரலில் "என்ன செய்கிறீர்கள்" என்று கேட்க, முதியவர் உடனே அவ்விடத்தை விட்டு சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து தாதிமை இல்லத்தின் நிர்வாகத்தினருக்குத் தெரியவந்ததும் அவர்கள் போலிசில் புகார் கொடுத்தார்கள்.

மானபங்கச் செயலில் ஈடுபடும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.