உலகளாவிய நிலையில் பகுதி மின்கடத்தித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள மந்தநிலை அத்துறையின் வாய்ப்புகளைக் குறைத்துவிடவில்லை.
ஐரோப்பிய சில்லு உற்பத்தியாளரான 'எஸ்டிமைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் அண்மைய முதலீடு, அதன் உத்திபூர்வமான இலக்கைப் பிரதிபலிக்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்றதன்மையும் இறுதிவடிவச் சந்தைகளில் குறிப்பாக, நுகர்வோர் மின்னணுவியல் சந்தைகள் பலவீன மடைந்திருப்பதும் தற்போதைய மந்தநிலைக்குக் காரணம்," என்றார் நிதியமைச்சருமான ஹெங்.
அங் மோ கியோவில் எஸ்டிமைக்ரோ எலக்ட்ரானிக்சின் மென்தகடு தயாரிப்புக்கான புதிய தொழில்கூடத்தை நேற்றுத் தொடங்கி வைத்துப் பேசிய திரு ஹெங், இத்துறையில் வளர்ச்சி இருப்பதை குறிப்பிட்டார்.
அதிகாரபூர்வ முன்னுரைப்பின்படி, சிங்கப்பூரின் உற்பத்தித் துறை முழு ஆண்டின் அடிப்படையில் சரிவை எதிர்பார்க்கின்றன. கடந்த மாதம் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் குறைந்திருந்தன.
சிங்கப்பூரில் 60க்கும் மேற்பட்ட பகுதிமின்கடத்தியைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவை உலகின் 11% பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்கின்றன. சிங்கப்பூர் பொருளியலில் இது ஏழு விழுக்காட்டைக் கொண்டிருக்கிறது.
இப்போது மிதமான வளர்ச்சி இருந்த போதிலும், இதற்கு முந்திய சில ஆண்டுகளில் பகுதிமின்கடத்தித் துறை வலுவான வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, நடமாட்ட சாதனங்கள் போன்ற புதிய சாதனங்களின் உருவாக்கத்தால் இதற்குப் புதிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கவனிக்கத்தக்க துறைகளில் ஒன்று தானியக்க வாகனத் தயாரிப்பு. மின்சார வாகனங்களுக்கும் தானியக்க வாகனங்களுக்கும் இடையே, உலகளாவிய பகுதிமின்கடத்தி சந்தை, 2017ல் யுஎஸ்$37.4 பில்லியன் ஆக இருந்தது (51.5 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) 2023ல் யுஎஸ்$58.5 பில்லியன் ஆக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்டிமைக்ரோ எலக்ட்ரானிக்சின் புதிய தொழிற்கூடம் சிங்கப்பூரில் எட்டு இஞ்ச் அளவிலான மென்தகடுகளைத் தயாரிக்க இரட்டிப்பு இடவசதியைக் கொண்டிருக்கும். கார் மின்மயமாக்கல், மின்னிலக்கமாக்கலுடன், ஏனைய பிற உயர் வளர்ச்சி தொழில்துறை செயல்முறைகளின் வலிமையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பகுதி மின்கடத்தி நிறுவனமான மைக்ரோன், சிங்கப்பூரில் பல பில்லியன் வெள்ளி மென்தகடு தயாரிப்பை விரிவாக்குவது குறித்த ஒரு மாத காலத்தில் எஸ்டிமைக்ரோ எலக்ட்ரானிக்சின் தொழில் விரிவாக்கத்தை அறிவித்துள்ளது.
புதிய தொழிற்கூடத்தில் அடுத்த தலைமுறை சில்லுகளையும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளையும் உற்பத்தி செய்வதுடன், எஸ்டிமைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள், கட்டடம், உள்ளூர் திறனாளர்களிடம் முதலிடுகிறது என்றார் திரு ஹெங்.
இப்புதிய வசதி மூலம், அந்நிறுவனம் தற்போதைய ஊழியரணியில் 400க்கும் அதிகமான புதிய வேலைகளை உருவாக்கியுள்ளது. எஸ்டிமைக்ரோ எலக்ட்ரானிக்சில் கிட்டத்தட்ட 5,000 பேர் வேலை செய்கிறார்கள்.

