குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் உயர்வு; பெற்றோர்கள் அதிருப்தி

முழுநாள் குழந்தைப் பராமரிப்புக்கான கட்டணங்களை ஐந்தில் ஒரு குழந்தைப் பராமரிப்பு நிலையம் அடுத்த ஆண்டு உயர்த்துகிறது. இதனால் பெற்றோர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். 

குழந்தைப் பராமரிப்புக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படுமென கடந்த மாதம் அறிவிக்கப்பட்டுக் குறுகிய காலத்திற்குள் கட்டணங்கள் உயர்த்தப்படுவதைச் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கூடுதல் மானியத்திற்குத் தகுதி பெறுவதற்கான மாத வருமானத்தின் உச்ச வரம்பு $7,500ல் இருந்து $12,000 ஆக உயர்த்தப்பட்டது. அதோடு, குறைவாகச் சம்பாதிப்போருக்குக் கிடைக்கும் கூடுதல் மானியத்தொகையும் உயர்த்தப்பட்டது. 

அடுத்த ஆண்டிலிருந்து 330 குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் சிங்கப்பூர் குடிமக்களுக்கான முழுநாள் குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்களை உயர்த்துவதாகப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது. இடைநிலை கட்டண உயர்வு, “கட்டணத்தின் 5 விழுக்காட்டுக்குள் இருக்கிறது,” என்றும் முந்திய ஆண்டுகளோடு ‘பரந்த அடிப்படையில் நிகரானது’ என்றும் அமைப்பு தெரிவித்தது. 

அதோடு, பெரும்பாலான நிலையங்கள், கூடுதல் மானியம் பற்றி ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அடுத்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவதாக அமைப்பிடம் தெரிவித்திருந்தன. மீதி நிலையங்கள் அமைப்பின் செப்டம்பர் 1 காலக்கெடுவுக்குள் தெரியப்படுத்தின. 

இவ்வாண்டு 220 நிலையங்களும் சென்ற ஆண்டு 540 நிலையங்களும் கட்டணங்களை உயர்த்தின. 

கட்டணங்களை உயர்த்தும் நிலையங்கள், பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பிடம் தெரியப்படுத்துவதோடு, கட்டண உயர்வு நடப்புக்கு வருவதற்குக் குறைந்தது நான்கு மாதங்களுக்கு முன்பாகப் பெற்றோர்களிடம் தெரிவிக்கவேண்டும். 

ஆக அதிகமான பாலர் பள்ளிகளை நடத்தும் மசேக சமூக அறநிறுவனத்தின் ஸ்பார்க்கல்டாட்ஸ், என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸின் மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் ஆகிய இரண்டும், மற்ற நிலையங்களைவிடக் குறைவாகக் கட்டணம் விதித்துவரும் சில நிலையங்களில் கட்டணங்களை உயர்த்துகின்றன. இவை மொத்தம் சுமார் 500 நிலையங்களை நடத்துகின்றன.