வசதிகுறைவான குடும்பங்கள் போக்குவரத்து பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் 

வசதிகுறைந்த குடும்பங்கள் இவ்வாண்டு அக்டோபர் 31 வரை போக்குவரத்து பற்றுச்சீட்டு திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து உதவித் தொகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் புதன்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன. 

போக்குவரத்து பற்றுச்சீட்டுக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாத, தகுதிபெறும் குடும்பங்கள் தங்களது வட்டாரத்திலுள்ள சமூக நிலையங்களில் விண்ணப்பிக்கலாம்.

மாதத்திற்கு $1,900 அல்லது அதைவிடக் குறைவான வருமானமுள்ள குடும்பங்கள், அல்லது குடும்பத்தின் சராசரி தனிநபர் மாத வருமானம் $650க்கு மேற்போகாத குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதி பெறும். 

வசதிகுறைவான குடும்பங்கள் போக்குவரத்து செலவுகளைச் சமாளிக்க உதவியாக, சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டால் சுமார் 192,000 குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. இந்தக் குடும்பங்களுக்கு $5.8 மில்லியனுக்கு மேல் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த  நடவடிக்கை 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி தொடங்கியது. 

சென்ற ஆண்டின் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு 300,000 குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட $9 மில்லியன் தொகையில் இது பாதிக்கும் அதிகம். 

கூடுதல் உதவி தேவைப்படும் குடும்பங்கள், சமூக மன்றங்களின் வாயிலாகக் கூடுதல் பற்றுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். தலா $30 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பயன்படுத்திவிடவேண்டும்.