தாதியைக் கொன்று, ஆடைகளின்றி படமெடுத்து, பாலுறவு கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு

சீன நாட்டவரான சாங் ஹுவாசியாங்கின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக மலேசியரான 51 வயது போ சூன் ஹோ மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. இது தொடர்பான முதல் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்த குமாரி சாங்கின் கழுத்தை துண்டு ஒன்றால் நெரித்துக் கொன்ற பிறகு ஆடையில்லாத அப்பெண்ணின் சடலத்தைப் படம் எடுத்து அப்பிணத்துடன் பாலியல் உறவு கொள்ள போ முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றத்தை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கும் மாலை 5.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சர்க்கிட் சாலையில் உள்ள தமது வாடகை அறையில் போ புரிந்ததாக அறியப்படுகிறது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் போவுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம். பொறாமை காரணமாக குமாரி சாங்கை போ கொலை செய்ததாக அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2011, 2012 ஆண்டுகளில், குமாரி சாங் தாதிமைக் கல்வி பயின்றுகொண்டிருந்தபோது மரினா பே சேண்ட்ஸ் ரிசோர்ட் ஊழியர்களுக்கான உணவகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். அப்போது அவருக்கு போவின் அறிமுகம் கிடைத்தது.

குமாரி சாங் மரணம் அடைவதற்கு சில நாட்கள் முன்பு வேறொரு ஆடவருடன் அவர் டாக்சியில் செல்வதைப் பார்த்த போவுக்கு பொறாமை ஏற்பட்டது. 

சம்பவத்தன்று தன்னுடன் பாலியல் உறவு கொள்ள முயன்ற போவை குமாரி சாங் நெருங்கவிடவில்லை. அந்த இன்னோர் ஆடவரைப் பற்றி போ கேட்டபோது, தாம் அவருடன் நான்கைந்து தடவை வெளியே சென்றிருப்பதாக குமாரி சாங் கூறினார்.

அதுமட்டுமல்லாது, சீனாவில் இருக்கும் தமது முன்னாள் காதலனுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அவருடன் நெருக்கமாக இருப்பது இயல்பு என்றும் போவிடம் குமாரி சாங் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த போ, துண்டைப் பயன்படுத்தி குமாரி சாங்கின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக நம்பப்படுகிறது. இறந்துவிட்ட குமாரி சாங் தடுக்க முடியாது என்பதால் அவரது பிணத்துடன் பாலியல் உறவு கொள்ள போ முயன்றது, தோல்வியில் முடிந்தது. இரவு முழுவதும் பிணத்துடன் இருந்துவிட்டு மறுநாள் அங்கிருந்து மலாக்காவில் இருக்கும் தமது சகோதரியின் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றைக் கூறிய போவுக்கு, வாடகை அறை ஒன்றை போவின் சகோதரி தேடித் தந்தார்.

இதற்கிடையே, அறையில் குமாரி சாங்கின் பிணம் இருப்பதைக் கண்டுபிடித்த வீட்டின் உரிமையாளர் போலிசில் புகார் செய்தார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதியன்று போவை மலேசிய போலிசார் கைது செய்து சிங்கப்பூர் போலிசிடம் ஒப்படைத்தனர். குமாரி சாங் மீது கோபமடைந்ததால் அவரது கழுத்தை நெரித்ததை போ ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.

போ மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என பரிசோதனைகளுக்குப் பிறகு மனநலக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.