நீதிமன்றம்: வீட்டை விற்க உத்தரவிட முடியாது

நீதிமன்றம்: வீட்டை விற்க உத்தரவிட முடியாது

2 mins read
b50a4349-d7fe-417a-85c0-d7fb6726aaab
திரு குழந்தைவேலு மலையப்பெருமாள் (இடது), திரு கோபால் சுப்பிரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ் -

நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் தம்மிடம் தந்த $2 மில்லியன் வெள்ளியில் ஏறத்தாழ $330,000 பயன்படுத்தி தமது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக்காக செலவழித்தார் திரு குழந்தைவேலு மலையப்பெருமாள். திரு மலையப்பெருமாள் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியபோதும் அவருடைய வீட்டை விற்க உத்தரவிடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

அந்த வீவக வீட்டிற்கு திரு மலையப்பெருமாளின் மனைவியும் ஓர் உரிமையாளர் என்பதே இதற்குக் காரணம். நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட டாக்டர் ஃபிரீடா பால் தந்த $3 மில்லியன் வெள்ளியை திரு மலையப்பெருமாளும் திரு கோபால் சுப்பிரமணியமும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2009ஆம் ஆண்டில் டாக்டர் ஃபிரீடா பாலின் ஹேக் ரோடு பங்களா வீடு $15.4 மில்லியனுக்கு விற்கப்பட்டது. அதிலிருந்து திரு மலையப்பெருமாளுக்கும் திரு கோபால் சுப்பிரமணியத்துக்கும் பணம் கிடைத்தது.

ஒருகாலத்தில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் குழந்தை மருத்துவ நிபுணராகப் பணியாற்றிய டாக்டர் ஃபிரீடா 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அப்போது அவருக்கு 87 வயது.

2000களின் தொடக்கத்தில் இந்திய நாட்டவர்களான திரு மலையப்பெருமாளுக்கும் திரு கோபால் சுப்ரமணியத்துக்கும் டாக்டர் ஃபிரீடா பாலின் நட்பு கிடைத்தது. டாக்டர் ஃபிரீடாவின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட திரு மலையப்பெருமாளுக்கும் அவரது மேற்பார்வையாளர் திரு கோபால் சுப்பிரமணியத்துக்கும் டாக்டர் ஃபிரீடா பாலின் அறிமுகம் கிடைத்தது.

2009ஆம் ஆண்டில் திரு மலையப்பன், டாக்டர் ஃபிரீடா பாலின் வீட்டில் தங்க ஆரம்பித்தார்.

2010ஆம் ஆண்டில் டாக்டர் ஃபிரீடாவின் வீடு விற்கப்பட்டபோது கிடைத்த பணத்தில் திரு மலையப்பெருமாளுக்கும் டாக்டர் ஃபிரீடா பாலின் பணிப்பெண் அருளம்பலம் காந்திமதிக்கும் தலா $2 மில்லியன் கிடைத்தது.

திரு சுப்பிரமணியத்துக்கு $912,000 கிடைத்தது.

தமது சொத்துகளில் பெரும்பாலானவை திரு மலையப்பெருமாளுக்கும் திருவாட்டி காந்திமதிக்கும் போக வேண்டும் என்று டாக்டர் ஃபிரீடாவின் உயிலில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் 2007ஆம் ஆண்டில் அவர் எழுதிய உயிலில், தமது சொத்துகளில் பெரும் பகுதியை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ மாணவிகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பணத்தைக் கொண்டு உதவித் தொகை நிதி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ஃபிரீடா அந்த உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

டாக்டர் ஃபிரீடா பால் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்குப் பிறகு திரு மலையப்பெருமாளும் திரு சுப்பிரமணியமும் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டில் இலங்கைக்குத் திரும்பிய திருவாட்டி காந்திமதிக்கு எதிராகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கு தொடுத்தோருக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தும் பணத்தைத் திரும்ப பெற முடியாதபடி அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் ஃபிரீடா பாலின் சொத்துகள் வாதிகளின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று எந்த ஓர் ஆவணமும் குறிப்பிடவில்லை என்று நீதிமன்றம் கூறியது. எனவே, திரு மலையப்பெருமாளின் வீட்டை விற்க உத்தரவிட முடியாது என்று அது கூறியது.