சாங்கி வட்டாரத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்

சாங்கி வட்டாரத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்

3 mins read
17519eda-6326-4c55-885c-f1a491d5b17f
லோயாங் அவென்யூவில் இரு வழிகளிலும் புதிய பேருந்துத் தடங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாது, லோயாங் அவென்யூ, தெலுக் பாக்கு சாலை, நிக்கல் டிரைவ், சாங்கி கோஸ்ட் சாலை, ஏவியேஷன் பார்க் சாலை ஆகியவை வழியாக புதிய 3 கிலோ மீட்டர் சைக்கிள் பாதைகள் ஏற்கெனவே இருக்கும் பூங்கா இணைப்புக் கட்டமைப்புடன் இணைக்கப்படும். கோப்புப்படம்: எஸ்டி -

சாங்கி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்களில் நிறைய உள்கட்டமைப்புப் பணிகள் நடத்தப்பட இருக்கின்றன. புதிய கிராஸ் ஐலண்ட் எம்ஆர்டி ரயில் பாதை அவ்வட்டாரத்தில் ரயில் சேவையை வழங்க இருக்கிறது. சாங்கி விமான நிலையத்தின் புதிய ஐந்தாவது முனையத்தைப் பயன்படுத்துவோருக்கு வசதியாக அப்பகுதியில் புதிய சாலைகளும் மேம்பாலச் சாலைகளும் கட்டப்படும்.

ஏற்கெனவே இருக்கும் சாலைகளை அகலப்படுத்தவும் புதிய சாலைகளைக் கட்டவும் புதிய மேம்பாலச் சாலையைக் கட்டவும் அவ்வட்டாரத்தில் சைக்கிள் பாதைகளை அமைக்கவும் ஒப்பந்ததாரர்

களைத் தேர்ந்தெடுக்க இவ்வாண்டு இறுதிக்குள் ஏலக் குத்தகை விடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லகுனா நேஷனல் கோல்ஃப் அண்ட் கன்ட்ரி கிளப்பின் ஒரு பகுதியும் ஜேடிசி கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான மூன்று நிலங்களும் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக பெறப்பட்டுள்ளன.

சாங்கி வடக்குப் பகுதி, சாங்கி தெற்குப் பகுதி எனப் பணிகள் நடத்தப்படும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சாங்கி வடக்குப் பகுதியில் லோயாங் அவென்யூ வழியாக தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கும் லோயாங் வேக்கும் இடையே மேம்பாலச் சாலை கட்டப்படும். அருகில் வீடுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு சாலைகளில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் சத்தத்தைக் குறைக்க புதிய மேம்பாலச் சாலைகளில் இரைச்சல் தடுப்புகள் பொருத்தப்படும்.

லோயாங் அவென்யூவில் இரு வழிகளிலும் புதிய பேருந்துத் தடங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாது, லோயாங் அவென்யூ, தெலுக் பாக்கு சாலை, நிக்கல் டிரைவ், சாங்கி கோஸ்ட் சாலை, ஏவியேஷன் பார்க் சாலை ஆகியவை வழியாக புதிய 3 கிலோ மீட்டர் சைக்கிள் பாதைகள் ஏற்கெனவே இருக்கும் பூங்கா இணைப்புக் கட்டமைப்புடன் இணைக்கப்படும்.

மேம்பாலச் சாலை, சாலை, நிலத்துக்கு அடியில் உள்ள எம்ஆர்டி சரங்கப்பாதைகள் ஆகியவை மூலம் மூன்று நிலை போக்குவரத்து முறை அமைக்கப்படும். பெரும்பாலான பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவுறும் என்று ஆணையம் தெரிவித்தது. ஏஞ்சியுள்ள பணிகள் 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவுறும்.

அதே நேரத்தில் அவ்வட்டாரத்தில் நான்கு கிராஸ் ஐலண்ட் ரயில் பாதை நிலையங்களும் தயாராகிவிடும்.

ஸீலிங் அவென்யூவுக்கும் தானா மேரா கோஸ்ட் சாலைக்கும் இடையே 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய சைக்கிள் பாதைகள் கட்டப்படும். இந்தப் பாதைகள் ஏற்கெனவே இருக்கும் பூங்கா இணைப்புக் கட்டமைப்புடன் இணைக்கப்படும். தெம்பனிஸ் வட்டாரத்தையும் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தையும் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையத்துடன் இணைக்கும் சாலைகளில் இருக்கும் சைக்கிள் தடங்களையும் புதிய சைக்கிள் பாதைகள் இணைக்கும்.

சாங்கி தெற்குப் பகுதியில் நடத்தப்படும் பணிகள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராஸ் ஐலண்ட் ரயில் பாதை சாங்கியையும் துவாஸையும் இணைக்கிறது. சாங்கியையும் சின் மிங்கையும் இணைக்கும் முதல் கட்டப் பணிகள் 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும். அதற்குள் பாசிர் ரிஸ், லோயாங் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 15,000 குடும்பங்கள் நடந்து சென்று பத்து நிமிடங்களில் எம்ஆர்டி நிலையத்தை அடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிடும்.

கிராஸ் ஐலண்ட் ரயில் பாதையைப் பயன்படுத்தும் அங் மோ கியோ குடியிருப்பாளர்கள் சாங்கியின் வடக்குப் பகுதிக்குப் பயணம் செய்யும்போது அரை மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்று ஆணையம் கூறியது.

புதிய போக்குவரத்துத் திட்டங்கள் லோயாங் தொழிற்பேட்டை, விமானப் போக்குவரத்துத் தளவாடப் பூங்கா போன்ற முக்கிய தொழிற்பேட்டை மற்றும் வர்த்தக வட்டாரங்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று ஆணையம் குறிப்பிட்டது. அதுமட்டுமல்லாது, லோயாங் அவென்யூ போன்ற முக்கிய சாலைகளைப் பாதித்து வரும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க இது உதவும் என்று ஆணையம் தெரிவித்தது.