முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நோயாளி இறந்த சம்பவத்தில் மருத்துவரின் செயல்பாட்டில் மரண விசாரணை அதிகாரி குறைகண்டார். அந்தத் தவறு சாதாரணமான ஒன்றல்ல என்றார் அவர்.
அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிக்கு சிகிச்சை வழங்கும் ஒரு மருத்துவர் வழங்க வேண்டிய தரமான சிகிச்சையை டாக்டர் சியன் இங் யுங் சுவான் வழங்கத் தவறிவிட்டார் என்று ஏழு நாள் விசாரணைக்குப் பின்னர் மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்தார். கடந்த 2016 நவம்பர் மாதம் 78 வயது திருமதி யுவென் இங்போர்க்கிற்கு டாக்டர் இங் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார்.
அறுவை சிகிச்சையின்போது டாக்டர் இங் திருமதி யுவெனின் தசைநாரை தவறுதலாக வெட்டியுள்ளார். பின்னர் வேறொரு மருத்துவர் அதனைச் சரிசெய்துள்ளார். மறுநாள் அவரது ரத்த அளவு குறைந்துள்ளது. அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. திருமதி யுவெனின் ரத்த நாளம் வெட்டப்பட்டதை டாக்டர் இங் அறியவில்லை.
அதனால் அவருக்கு உள்ளுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டதுடன், ரத்த ஓட்டமும் தடைப்பட்டது. முதலில் அவரது கால் வெட்டப்பட்டது. சிகிச்சை தாமதமானதால் உடலில் நச்சு பரவியது. பின் உடலுறுப்புகள் செயலிழந்து அவர் இறந்தார்.
விசாரணையில் சாட்சியமளித்த இரு மருத்துவர்கள் முழங்காலில் ரத்த நாள சிக்கல் ஏற்படுவது அரிது எனக் கூறினர்.மேலும் அறுவை சிகிச்சையில் கவனமின்மை இருந்துள்ளதையும் சுட்டினர். மேலும் சிகிச்சை பற்றிய மருத்துவக் குறிப்புகள் பல இடங்களில் விடு பட்டுள்ளதால் சிகிச்சை முறை ஒழுங்காக வழங்கப்பட்டதா என்பதை நிபுணர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அத்துடன் டாக்டர் இங், தோக்கியோவுக்கு செல்வதற்கு முன்னால் நோயாளியை, மற்றொரு மருத்துவரின் கண்காணிப்பில் விட்டுச் செல்லத் தவறிவிட்டார். இந்தப் போக்கு முறையில்லாதது என்று அதிகாரி கூறினார்.
இது தொடர்பாக டாக்டர் இங் மீது சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தில் மவுண்ட் எலிசபெத் மருத்துமனை புகார் செய்துள்ளது.

