உலகின் 20 பிரதான பொருளியல்களில் ஆசிய நாடுகள்தான் மூப்படைதலாலும் வேலையிட தானியக்கமயமாதலாலும் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ஆகக் குறைந்த தயார்நிலையில் உள்ளன.
'மெர்சர் அண்ட் மார்ஷ்', 'மெக்லெமன் இன்சைட்ஸ்' ஆகியவை நேற்று வெளியிட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தயார்நிலை குறியீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்கு ஆசிய நாடுகளில் முதல் இடத்தில் இருந்தாலும் சிங்கப்பூர் 13வது நிலையில்தான் இருக்கிறது.
ஆகக்கடைசியாக 20வது இடத்தில் தென்கொரியா உள்ளது. சீன 18, ஜப்பான் 17வது இடங்களில் உள்ளன.
மூப்படைதலும் வேலையிட தானியக்கமயமாதலும் ஒரு நாட்டின் தயார்நிலையை இக்குறியீடு குறிக்கிறது.
மூப்படைதலாலும் வேலைகள் தானியக்கமாக்குதலாலும் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கக்கூடிய அம்சங்களையும் நாடுகளின் ஓய்வுக் காலத்திற்கான திட்டங்களையும் இக்குறியீடு அளவிடுகிறது.
ஊழியரணியில் அதிகளவிலான முதிய ஊழியர்களின் பங்களிப்பு, போதிய ஓய்வூதிய நிதிச் சொத்து, சாதகமான சமூக பொருளியல் நிலைமைகள், தகுந்த கொள்கைகள் போன்றவை தாக்கங்களைக் குறைக்கக்கூடிய அம்சங்களில் இடம்பெறுகின்றன.
வேலைகள் தானியக்கமாக்குதலால் முதிய ஊழியர்களுக்கும் இளைய ஊழியர்களுக்கும் இடையே ஏற்படக்கூடிய தாக்கத்தின் சராசரி அளவு சிங்கப்பூரில் அதிகமாக உள்ளது. தானியக்கமாக்குதலுக்கு முதிய ஊழியர்கள் அளவுக்கு அதிகமான பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.
இது தென்கொரியாவில் 31.7%, சிங்கப்பூரில் 26.8%, ஜப்பானில் 23.5%, சீனாவில் 21.5% ஆக உள்ளது.
மேலும் ஊழியரணியில் 65 வயதும் அதற்கு மேற்பட்ட முதிய ஊழியர்களின் பங்களிப்பு உலக சராசரியான 14.7 விழுக்காட்டை விட இந்நாடுகளில் அதிகமாக உள்ளது.
சிங்கப்பூர் தாக்குப்பிடிக்கும் தன்மையை அதிகம் கொண்டிருந்தாலும், இளைய ஊழியர்களுடன் ஒப்பிட முதிய ஊழியர்கள் தானியக்கமாக்குதலுக்கு அளவுக்கு அதிகமாக பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.
மெர்சர் ஆய்வின்படி, 2030ஆம் ஆண்டு வாக்கில், சிங்கப்பூரின் வேலை செய்யும் மக்கள் தொகையில் 35% 50 வயதுக்கும் அதிகமாக இருக்கும்.
உலகளவில், அரசாங்கங்களும் அமைப்புகளும் மாற்றங்களை எதிர்கொள்ளும் முக்கியமான காலகட்டத்தில் உள்ளன. தொழில்நுட்ப மேம்பாடு, 50 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுமுள்ள முதிய ஊழியர்கள் பெரும்பாலும் ஈடுபடும் திறன்குறைந்த வழக்கமான வேலைகளை தானியக்கமாக்கும் ஆபத்தை அதிகரித்து வருகிறது.
அதேநேர்ததில் உலகெங்கும் மக்கள் தொகையும் மூப்படைந்து வருகிறது. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வேலை செய்யும் வயதினரின் எண்ணிக்கை குறைந்தும் வருவதாக அந்த அறிக்கை சுட்டியது.
இது புதுவிதமான ஊழியர் அணியில் முதலீடு செய்யும் வாய்ப்பை நிறுவனங்களுக்கு வழங்குகிறது என்றார் சிங்கப்பூர் மெர்சர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெட்டா லாட்டிமர்.
பகுதி ஓய்வும், மறு ஓய்வும் சாதாரணமானதாகும்போது, முதலாளிகள் இந்த வாய்ப்பை, அனுபவம் மிக்க ஆர்வமுள்ள, துடிப்பான திறனாளர்களைப் பெற பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கும் வேலைவாய்ப்புக்கு, வேலையை வடிவமைப்பதற்கான புதிய யோசனைகள், பாரம்பரியமான முழு நேர ஊழியரணி கட்டமைப்பை மாற்றி அமைப்பது, மேலாளர்களின் பணிகளை மறுயோசனை செய்வது போன்றவை தேவைப்படும் என்றார் அவர்.
வேலை செய்வதில் நீக்குப்போக்கான அணுகுமுறை தேவை என்றும் அவர் கூறினார்.
இதன்மூலம் முதிய ஊழியர்கள் வளத்தை, குறிப்பிட்ட திறன்களில் நிபுணத்துவம் பெற்ற, பல ஆண்டுகால அனுபவத்தை வழங்கக்கூடிய, ஏனைய அமைப்புகளும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஓர் அங்கமாகலாம் என்று பெட்டா லாட்டிமர் தெரிவித்தார்.

