பாதுகாப்பின்றி கூடாரத்தின் மீது ஏறிய ஊழியர்கள்; மனிதவள அமைச்சு விசாரணை

ஈசூன் வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரம் ஒன்றின்மீது இரண்டு ஊழியர்கள் பாதுகாப்பின்றி மேலே ஏறிய சம்பவத்தை மனிதவள அமைச்சு விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈசூன் சென்ட்ரல் 2ல் அந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஜேசி என்ற ‘ஸ்டாம்ப்’ இணையத்தள வாசகர், அதனை உடனடியாகப் படமெடுத்தார். 

“கூடாரத்தின் துணி மிதித்து ஏறக்கூடியதா? இந்த உயரத்திற்கு ஏறும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை,” என்றார் அந்த வாசகர். கால் இடறினால் அவர்களது உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் அவர்கள் இருந்ததாக  ஜேசி, ஸ்டாம்ப்பிடம் தெரிவித்தார்.

“பிரச்சினையைக் கிளப்புவது எனது நோக்கமல்ல. ஆனால் இது ஆபத்தானது. அவர்கள் தங்கள் பிழைப்பை நடத்த முயல்வதை நான் அறிவேன். ஆனாலும் பத்திரமாக இருங்கள்,” என்று அவர் சொன்னார்.

இந்தச் சம்பவம் பற்றி அறிவதாக ஸ்டாம்ப்பிடம் தெரிவித்த மனிதவள அமைச்சு, இதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியது.