எஃகுத் தகடு விழுந்து கட்டுமான ஊழியர் மரணம்

கொன்டோமனியக் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்து காரணமாக 25 வயது பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் மாண்டார். இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. அந்தக் கட்டுமான ஊழியர் மீது எஃகுத் தகடு விழுந்ததால் அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள அந்தக் கட்டுமானத் தளத்தில் கனரக இயந்திரங்களின் பயன்பாட்டை நிறுத்த மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது. விபத்து குறித்து அமைச்சு விசாரணை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் டிசூன் இஞ்சினியரிங் நிறுவனத்தின் ஊழியர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் தொடர்புகொண்டபோது ஊழியரின் மரணம் குறித்து அந்நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

விபத்து நிகழ்ந்த தி ஃபிளோரன்ஸ் ரெசிடன்சஸ் கட்டு மானத் தளம் ஹவ்காங் அவென்யூ 2ல் உள்ளது.

அங்கு 18 மாடி கொன்டோமினியம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவுபெறும் என்று கட்டுமானப் பணிகளைக் கவனித்து வரும் தியோங் ஐக் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ஊழியரைக் காப்பாற்ற அவர் மீது விழுந்த எஃகுத் தகட்டைப் பாரந்தூக்கி பயன்படுத்தி தூக்க சக ஊழியர்கள் முயன்றதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவியது.

இவ்வாண்டின் முதல் பாதியில் வேலையிட விபத்துகளில் 17 ஊழியர்கள் இறந்தனர். கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வேலையிட விபத்துகள் காரணமாக 18 ஊழியர்கள் மாண்டனர்.

கடந்த ஆண்டில் வேலையிட விபத்து காரணமாக மொத்தம் 41 ஊழியர்கள் மாண்டனர்.

சிங்கப்பூரின் வேலையிட மரணம் விளைவிக்கும் விபத்துகள் விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளது.

இந்த விகிதத்தைக் குறைக்க முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பு இலக்கு கொண்டுள்ளது.