'டார்க் வெப்' இணையப்பக்கம் மூலம் தமது முன்னாள் காதலியின் காதலரைக் கொல்ல அடியாள் ஒருவரை அமர்த்த முயன்றவருக்கு நேற்று முன்தினம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, டார்க் வெப் இணையப்பக்கம் மூலம் அடியாட்களை மேலும் சிலர் தேடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அடியாட்களை வழங்குவதாகக் கூறப்படும் இணையப்பக்கம் மூலம் சிங்கப்பூரில் குறைந்தது மேலும் மூன்று பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்களில் பொங்கோல் வட்டாரத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவரும் அடங்குவார். அந்த மாணவரைக் கொல்ல கடந்த ஆண்டு மே மாதம் பிட்காயின் மூலம் $2,600 கட்டணம் செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
மாணவரின் பெயரும் பள்ளி முகவரியும் இணையபக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, பெண் ஒருவரை அடியாட்கள் வைத்துக் கொல்ல அவரைப் பற்றிய விவரங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த இணையப்பக்கத்துக்குத் தரப்பட்டது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் அப்பெண்ணின் முகவரியும் பெயரும் இணையப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. அவரைக் கொல்ல பிட்காயின் மூலம் $5,900 கட்டணம் செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
அங் மோ கியோவில் வசிக்கும் ஒருவரைக் கொல்ல கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிட்காயின் மூலம் $67,000 கட்டணம் செலுத்தப்பட்டதாக ஓப்புக்கொள்ளப்பட்டது.
இந்த மூன்றுக்கும் பணம் கைமாறவில்லை என்று தி நியூ பேப்பர் நாளிதழ் தெரிவித்துள்ளது. குறிவைக்கப்பட்டோர் குறித்து கிடைத்த தகவல்களை தி நியூ பேப்பர் போலிசாரிடம் பகிர்ந்துள்ளது.

