நேர்மையற்ற கோபாலுக்குச் சிறைத்தண்டனை வழங்க ஊக்குவிக்கும் அரசுதரப்பு

சாங்கி விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளைப் பதிவு செய்யும் ஓர் ஊழியருக்குக் குறைந்தது 800 வெள்ளி கையூட்டு கொடுத்ததை கோபால் கிருஷ்ணா ராஜூ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். உணவுப் பதனீட்டு நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணிபுரிந்த 37 வயது கோபால், சிங்கப்பூரிலிருந்து தங்கத்தைச் சென்னைக்கு அனுப்பும் தொழிலையும் பகுதி நேரமாகச் செய்து வந்தார். பயணப் பெட்டிகளின் எடை அதிகமாக இருந்தால் அதற்காகக் கூடுதலாக கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டணத்தைச் செலுத்த விரும்பாத கோபால், விமான நிலைய ஊழியர் ஹிதேஷ்குமார் சாந்துபாய் பட்டேலை அணுகித் தனது பயணப் பெட்டியின் உண்மையான எடைக்குப் பதிலாக அதனைவிட குறைவான எடையை விமான நிலையப் படிவங்களில் குறித்து வைக்குமாறு கேட்டார். அதற்காகப் பணம் கொடுக்கத் தயார் என்றும் கோபால் கூற, பட்டேல் சம்மதித்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை கோபால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கோபால் இதே குற்றத்தைக் குறைந்தது பத்து முறை செய்திருந்ததை ஒப்புக்கொண்டார்.

இந்தியாவைச் சேர்ந்த கோபால்  சாங்கி விமான நிலைய ஊழியர்களுக்குக் கையூட்டு வழங்கியதற்காக குற்றம் சாட்டப்பட்ட நான்காவது நபர். கோபாலும் பட்டேலும் தங்கள் நண்பர்கள் மூலம் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டதாக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோபால் தனது தங்க வியாபாரத்திற்காகத் தபால் சேவையைப் பயன்படுத்த  மறுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

“இதற்கு மாறாக இவர் சென்னைக்குச் செல்லவிருக்கும் பயணிகளைத் தேடி, தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி,  தெரியாதவர்களாக இருந்தாலும் சரி, தங்கத்தை எடுத்துச் சென்று அங்குள்ள தனது உறவினர்களிடம் கொடுக்குமாறு கேட்பார். இதற்குச் சம்மதிக்கும் பயணிகளுக்கு அவர் பணம் தருவார்,” என்று அரசாங்க வழக்கறிஞர் டேவிட் கோ தெரிவித்தார்.

இப்படி தனக்காகச் சென்னைக்குத் தங்கம் எடுத்துச் செல்லும் பயணிகளைத் தேட கோபால் மாதத்திற்கு 15 முதல் 20 முறை வரை செல்வார் என்று திரு கோ கூறினார்.

பயணப்பெட்டியின் எடை தொடர்பான ஏமாற்று வேலைகளைப் பற்றிய செய்தி அறிக்கையை ‘த நியூ பேப்பர்’ செய்தித்தாள் கடந்தாண்டு ஜூலை வெளியிட்டபோது இக்குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது.

கோபாலுக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை அளிக்குமாறு திரு கோ  நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார். “ஊழல் நடவடிக்கைகளைச் சகிக்காத நாடு என்ற நல்ல பெயரை சிங்கப்பூர் பாடுபட்டு பெற்றுள்ளது. எனவே விமானத் துறையில் நடக்கும் ஊழல் சம்பவங்கள் சிங்கப்பூரின் நற்பெயருக்குப் பெரும் மிரட்டலாக உள்ளன,  ”என்றும் அவர் கூறினார்.