டிரம்ப்பைச் சந்தித்துப் பேசுகிறார் பிரதமர் லீ

டிரம்ப்பைச் சந்தித்துப் பேசுகிறார் பிரதமர் லீ

2 mins read
fa25bf1d-2476-4dd5-b0fa-6b3941adf67a
2018 ஜூன் 11ஆம் தேதி சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்பை வரவேற்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங். கோப்புப் படம்: எஸ்டி -

இன்று முதல் ஒரு வார காலம் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், அங்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் திரு லீ உரையாற்றுவார்.

இந்த விவரங்களைப் பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தது.

பிரதமர் லீ, அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்திக்கவிருப்பது இது நான்காவது முறை.

ஐநா பொதுச் சபையின் 74வது அமர்வில் பங்கேற்பதற்காக திரு லீ தலைமையில் சிங்கப்பூர் பேராளர் குழு நியூயார்க் செல்கிறது. உலக விவகாரங்களில் சிங்கப்பூரின் நிலை குறித்து பிரதமர் லீ பேசுவார்.

மொத்தம் 193 நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் இந்த வருடாந்தரக் கருத்தரங்கில் திரு லீ கலந்துகொண்டு உரையாற்றவிருப்பது இதுவே முதன்முறை.

அத்துடன், பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சநிலைக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள அவர், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

சிங்கப்பூரால் 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, நூற்றுக்கு மேற்பட்ட சிறிய நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஃபோரம் ஆஃப் ஸ்மால் ஸ்டேட்ஸ்' எனும் அதிகாரபூர்வமற்ற குழுவின் உறுப்பினர்களுக்கு பிரதமர் லீ விருந்தளித்துச் சிறப்பிக்கவுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, நியூயார்க்கைச் சேர்ந்த 'அப்பீல் ஆஃப் கன்சைன்ஸ் ஃபவுண்டேஷன்' எனும் சமய நல்லிணக்க அமைப்பு, பிரதமர் லீக்கு 'உலக அரசியல் பண்பாளர்' விருது வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது.

தொழில், நிதித் துறைத் தலைவர்களையும் அமெரிக்காவின் முக்கிய ஆளுமைகளையும் சந்திக்கவிருக்கும் திரு லீ, வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்கள் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்பார்.

திரு டிரம்ப்பின் அழைப்பை ஏற்று, கடந்த 2017ஆம் ஆண்டில் பிரதமர் லீ அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார்.

அதன்பின், 2017 ஜூலையில் 'ஜி20' உச்சநிலை மாநாட்டின்

போதும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிங்கப்பூர் வந்திருந்தபோதும் அவர் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தார்.

அத்துடன், அவ்விரு தலைவர்களும் தொலைபேசி வழியாகவும் கடந்த மூன்றாண்டுகளில் நான்கு முறை பேசியுள்ளனர்.

பிரதமரின் துணைவியார், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் பிரதமர் அலுவலகம் மற்றும் தொடர்பு, தகவல், தற்காப்பு, வெளியுறவு ஆகிய அமைச்சுகளின் அதிகாரிகளும் பிரதமருடன் அமெரிக்கா செல்கின்றனர்.

அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, இம்மாதம் 28 முதல் அடுத்த மாதம் 1ஆம் தேதி வரை ஆர்மீனியாவிற்குச் செல்லவிருக்

கிறார் திரு லீ.

யூரேசிய நாடு ஒன்றிற்கு சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.