வேலை வாய்ப்பு கண்காட்சி; 100,000 பேரை எட்ட முயற்சி

சிங்கப்பூரர்கள் வேலை தேட வேலைவாய்ப்பு நிலையங்களுக்குச் செல்லும் சிரமத்தைக் குறைத்து, அவர்களைத் தேடி அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சாலைக்காட்சிகள் வருகின்றன. 

‘மாற்றியமைத்துக்கொண்டு வளர்ச்சியடைதல்’ முயற்சி குறித்த சாலைக்காட்சிகள் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 100,000 பேரை எட்ட சிங்கப்பூர் ஊழியரணி (WSG) திட்டமிட்டுள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டில் இந்த சாலைக் காட்சிகளுக்கு வருகை தந்தோரைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்த சாலைக்காட்சிகள், பொருளியல் மந்தநிலை, மறுசீரமைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு மட்டுமின்றி, வேலையை மாற்ற நினைப்பவர்கள், ஊழியரணிக்குத் திரும்ப விரும்பும் ஓய்வுபெற்றவர்கள் போன்றோருக்கு உதவுகின்றன.

இதுவரையில்   இவ்வமைப்பு இத்திட்டம் குறித்து நடத்திய ஆறு சாலைக்காட்சிகளில் இதுவரையில் 68,000க்கும்  அதிகமானோர் பங்கேற்றுள்ளனர் என்று மனித வள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

‘மாற்றியமைத்துக் கொண்டு வளர்ச்சியடைதல்’  பற்றி நேற்று அங் மோ கியோவில் நடைபெற்ற  சாலைக்காட்சியில் அவர் கலந்துகொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த சாலைக்காட்சிகளில் வெவ்வேறு திட்டங்கள் தங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கும் என்பது குறித்து சிங்கப்பூரர்கள் சிறந்த புரிந்துணர்வைப் பெறுகின்றனர். 

சீரமைக்கப்பட்ட இந்த சாலைக்காட்சியில் பார்வையாளர்களை ஈடுபடுத்தும் வகையில் ஐபேட், தொலைக்காட்சித் திரைகள் போன்ற பல்வேறு மின்னிலக்க சாதனங்களின் வழி திட்டங்கள் குறித்து விளக்கப்படுகின்றன.

முன்பு தங்களுக்குப் பொருத்தமான வேலையை அடையாளம் காணும் சேவையைப் பெற மக்கள் ஐந்து வேலைவாய்ப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டியிருந்      தது.

சிலருக்கு இத்தகைய வேலைவாய்ப்பு நிலையங்களுக்குச் செல்லும் எண்ணம் இருந்தாலும், அவர்களுக்கு அதற்கான வாய்ப்போ, நேரமோ கிடைப்பதில்லை.

எனவே இத்தகைய சேவைகளை அவர்கள் வசிக்கும்,  அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் இடங்களுக்கு கொண்டு செல்ல அரசாங்கம் முடிவுசெய்தது என்றார் அமைச்சர் டியோ.

மக்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்கள் மூலம் அவர்கள் சிறந்த முறையில் பயன்பெற வேண்டு மானால் தேவைப்படும் சமயத்தில் அவர்கள் உதவி பெறலாம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.