நெஞ்சு எரிச்சலுக்குப் பயன்படும் எட்டு மருந்துகளுக்குத் தடை

நெஞ்சு எரிச்சலுக்குப் பயன்படும் எட்டு மருந்துகளுக்குத் தடை

1 mins read
96c10116-9833-42ed-8267-9e6c7b1632b9
சுகாதார அறிவியல் ஆணையக் கட்டடம். கோப்புப்படம்: எஸ்டி -

சிங்கப்பூரில் எட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் 'ரானிடிடின்' மருந்துகளை விற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் கலந்திருப்பதால் எட்டு நிறுவனங்களின் மருந்துகள் சிங்கப்பூர் கடைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

பொதுவாக நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றுக்கு இந்த மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் எட்டு நிறுவனங்களின் ரானிடிடின் வகை மருந்து களில் அனுமதிக்கப்பட்ட அனைத்துலக அளவுக்கு மேல் நைட்ரோசமைன், என்-நைட்ரோசோடிமீத்தலமைன் கலந்துள்ளாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

நைட்ரோசமைனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் என்று அண்மைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து உலக அளவில் இத்தகைய மருந்துகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட 'பேகான்', 'சாஸேஜ்' போன்றவற்றிலும் நைட்ரோசமைன் கலந்திருப்பது வழக்கம். ஆனால் அதன் அளவு மிக மிகக் குறைவு.

அஸிலோக் (Aciloc), ஆபோ-ரானிடிடின் (Apo-Ranitidine), ஹைஸான் (Hyzan), நியோசெப்டின்(Neoceptin), வெஸிகா(Vesyca), ஸானிடிடின்(Xanidine), ஸான்டாக்(Zantac) மற்றும் ஸைனால்-150 (Zynol-150) ஆகியவை விற்கவும் மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்ட எட்டு மருந்துகள் ஆகும்.