மூத்தோருக்கு ஏற்ற புதிய அடுக்குமாடி கிராமம்

மூத்தோருக்கு ஏற்ற புதிய அடுக்குமாடி கிராமம்

2 mins read
60178d6a-3925-414d-8167-16505ee3267b
இயூ டீ குளோசில் உள்ள காலி தளத்தில் பலதுறை மருந்தகம், சமூக மன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய குடியிருப்பு வசதி அமைவதற்கு வட்டாரவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூத்தோர் வசிப்பதற்கும் பலதுறை மருந்தகம், சமூக மன்றம் போன்ற வசதிகளையும் உள்ளடக்கிய சிங்கப்பூரின் இரண்டாவது 'அடுக்குமாடி கிராமம்' இயூ டீயில் அமையவிருக்கிறது.

இயூ டீ எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் அமையவுள்ள இந்த வசதி 2026ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடமைப்புக் கழகம், மக்கள் கழகம், சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த ஒருங்கிணைந்த மேம்பாடு இருக்கும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.

நேற்று 'இயூ டீ டவுன்' தினத்தில் கலந்துகொண்ட திரு வோங், பல அனைத்துலக விருதுகளை வென்ற 'கம்போங் அட்மிரல்டி' திட்டப்பணியை மாதிரியாகக் கொண்டு அமையவுள்ள இந்த மேம்பாடு, இயூ டீ குளோசில் உள்ள காலித் தளத்தில் உருவாகும். 'கம்போங் அட்மிரல்டி' திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

'கம்போங் அட்மிரல்டி'யைப் போலவே மூத்தோருக்கு ஏற்ற ஈரறை ஃபிளக்சி வீடுகள் இங்கு கட்டப்படும் என்று குறிப்பிட்ட திரு வோங், "சமூக மன்றம், பலதுறை மருந்தகம், சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் ஆகியனவும் இங்கு அமையும். பலரது வேண்டுகோளுக்கேற்ப முக்கியமாக, உணவு அங்காடி நிலையமும் இங்கு இடம்பெறும்," என்றார்.

சுவா சூ காங் பலதுறை மருந்தகம் மிகவும் கூட்டமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததால் இங்கு பலதுறை மருந்தகம் அமைக்க இருப்பதாகக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர் டாக்டர் லாம் பின் மின், சமூகத்தில் ஆரம்பகட்ட சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்தும் சுகாதார அமைச்சின் திட்டமாகவும் இது அமைகிறது என்றார்.

இந்தப் புதிய பலதுறை மருந்தகத்தை 'நேஷனல் யுனிவர்சிட்டி பாலிகிளினிக்ஸ்' நடத்தும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

சுவா சூ காங் வட்டாரவாசிகளுக்கு முதன்மை பராமரிப்புச் சேவைகள், நீண்டகால நோய் நிர்வாகம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரச் சேவைகள், மனநலச் சேவைகள் போன்றவை இந்த மருந்தகத்தில் வழங்கப்படும்.

ஐந்து புதிய பலதுறை மருந்தகங்கள் 2023ஆம் ஆண்டிலும் மேலும் இரண்டு 2025ஆம் ஆண்டிலும் கட்டி முடிக்கப்படவுள்ள நிலையில் இயூ டீ பலதுறை மருந்தகம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 30 முதல் 32 பலதுறை மருந்தகங்கள் இருக்கும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குழந்தைப் பராமரிப்பு, மூத்தோர் பராமரிப்பு நிலையங்களைக் கொண்ட 11 மாடி 'கம்போங் அட்மிரல்டி'யின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் லீ சியன் லூங், எதிர்காலத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் 'கம்போங்கு'கள் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.